ஓட்டுக்காக வேல் தூக்கி மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்; பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி


சேலத்தில் நடைபெற உள்ள பா.ஜனதா இளைஞர் அணி மாநாட்டுக்காக மேடை அமைக்க நேற்று கால்கோள் நடும் விழா
x
சேலத்தில் நடைபெற உள்ள பா.ஜனதா இளைஞர் அணி மாநாட்டுக்காக மேடை அமைக்க நேற்று கால்கோள் நடும் விழா
தினத்தந்தி 25 Jan 2021 5:29 AM IST (Updated: 25 Jan 2021 5:32 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டுக்காக வேல் தூக்கி மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார் என்று சேலத்தில் பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் கூறினார்.

பேட்டி 
சேலம் அருகே கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் வருகிற 6-ந் தேதி பா.ஜனதா மாநில இளைஞர் அணி மாநாடு நடைபெறுகிறது. இதற்காக அங்கு மேடை அமைக்க கால்கோள் விழா நேற்று காலை நடைபெற்றது. இதில், தமிழக பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு மேடை அமைப்பதற்கான பணியை தொடங்கி வைத்தார். 

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மகளிர்கள் மாற்று கட்சிகளுக்கு செல்லாமல் அதிகளவில் பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர். உலகத்திற்கு வழிகாட்டியாக உள்ள பிரதமர் மோடியின் ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் என்பதே இளைஞர்களின் விருப்பம். சேலத்தில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 6-ந் தேதி பா.ஜ.க. இளைஞரணி மாநாடு நடக்கிறது. 

சேலத்தில் தொடங்கும் எந்தவொரு மாநாடும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அதன்படி தான் ஜனசங்கம் இங்கே தொடங்கியது. இந்த மாநாடு வரலாற்று சிறப்பு மிக்க மாநாடாக அமையும். இந்த மாநாட்டில் கட்சியின் மூத்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

கூட்டணி பலமாக உள்ளது 
தமிழகத்தில் அடுத்த மாதம் முழுவதும் பா.ஜ.க. மாநாடுகள் நடைபெறும். மார்ச் மாதம் கட்சியின் மாநில மாநாடு நடைபெற உள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க.வின் வெற்றிவேல் யாத்திரைக்கு வெற்றி கிடைத்துள்ளது. மு.க.ஸ்டாலின் வேல் தூக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அவர், ஓட்டுக்காக இரட்டை வேடம் போடுகிறார். என்னதான் இரட்டை வேடம் போட்டாலும் மக்கள் நம்ப  மாட்டார்கள். பா.ஜ.க. கோரிக்கை வைத்த தைப்பூச விடுமுறை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

வருகிற 27-ந் தேதி தைப்பூசம் அன்று நானும், தேசிய செயலாளர் ரவியும் இணைந்து விரதம் இருந்து காவடி எடுக்க உள்ளோம். சென்னையில் வருகிற 27-ந் தேதி நடக்கும் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வருவது குறித்து எந்த தகவலும் தெரியாது. தமிழகத்தில் ராகுல்காந்தியின் பிரசாரம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தி.மு.க. கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையும். தேர்தலுக்கு முன்னதாகவே அது உடையும். அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி பலமாக உள்ளது.

இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

முன்னதாக நடந்த கால்கோள் விழாவில், மாநில இளைஞரணி தலைவர் வினோத் பி.செல்வம், சேலம் மாநகர் மாவட்ட தலைவர் சுரே‌‌ஷ்பாபு மற்றும் நிர்வாகிகள் கோபிநாத், அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story