நிவர் புயலை சமாளித்தது எப்படி? - தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய குழு ஆலோசனை


நிவர் புயலை சமாளித்தது எப்படி? - தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய குழு ஆலோசனை
x
தினத்தந்தி 25 Jan 2021 1:21 AM GMT (Updated: 25 Jan 2021 1:21 AM GMT)

நிவர் புயலை சமாளித்தது எப்படி? என்று தலைமை செயலகத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.

புதுச்சேரி,

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிவர் புயல் புதுவை அருகே கரையை கடந்தது. அப்போது புதுவையில் பலத்த மழை பெய்தது. ஒரே நாளில் 30 செ.மீ. அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் புயல் பாதிப்பின் போது புதுவை மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள், புயலை சமாளித்த விதம் குறித்து ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய கூடுதல் செயலர் திருப்புகழ் தலைமையிலான குழுவினர் நேற்று புதுச்சேரி வந்தனர்.

அவர்கள், புதுச்சேரி தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க், வருவாய்த்துறை செயலாளர் அசோக்குமார், நலத்துறை செயலாளர் உதயகுமார், சப்-கலெக்டர்கள் அஸ்வின் சந்துரு, தமிழ்ச்செல்வன் மற்றும் பல்வேறு துறை தலைவர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க், புதுச்சேரியில் தேசிய பேரிடரை எதிர்கொள்ள பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறினார். பேரிடர் காலங்களில் தொலைத்தொடர்பு துண்டிப்பு ஏற்படும் போது வாக்கி டாக்கி இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட தேசிய பேரிடர் ஆணைய குழுவினர், முத்தியால்பேட்டை சோலை நகர் இளைஞர் விடுதி அருகில் உள்ள இடங்கள், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அலுவலகம், வழுதாவூர் சாலை, கொடாத்தூரில் விவசாய நிலங்கள், நோணாங்குப்பம், காக்காயந்தோப்பு, தேங்காய்திட்டு, மரப்பாலம் ஆகிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டனர். இதன்பின்னர் நேற்று மாலை புதுவையில் இருந்து புறப்பட்டு சென்னை சென்றனர்.

Next Story