சிறுதானியங்களை பதப்படுத்தும் தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள்; தர்மபுரி மாவட்ட கலெக்டர் தகவல்


தர்மபுரி மாவட்ட கலெக்டர் கார்த்திகா
x
தர்மபுரி மாவட்ட கலெக்டர் கார்த்திகா
தினத்தந்தி 25 Jan 2021 7:05 AM IST (Updated: 25 Jan 2021 7:05 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் சிறுதானியங்களை பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள் பிரதமரின் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளை பெற்று பயன்பெறலாம் என்று கலெக்டர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

உணவு பதப்படுத்துதல்
இந்திய பிரதமரால் 2020-2021-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைப்புசாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்த பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நடப்பாண்டு முதல் வருகிற 2024-2025-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் 60 சதவீத பங்களிப்பு மற்றும் மாநில அரசின் 40 சதவீத பங்களிப்புடன் இந்த திட்டம் மாவட்டத்துக்கு ஒரு விளைபொருள் என்ற அணுகுமுறையுடன் செயல்படுத்தப்படும்.

தமிழகத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. உணவு பதப்படுத்துதல் துறையில் ஏற்கனவே உள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல், புதிய நிறுவனங்களை தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், தொழில்நுட்ப பயிற்சிகளை அளித்தல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றிற்கு நிதிஉதவி வழங்கப்படும். உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் சுய உதவிகுழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கும் நிதி உதவி வழங்கப்படும்.

முன்னுரிமை
தர்மபுரி மாவட்டத்தில் சிறுதானியங்கள் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் பெற்று பயன்பெற வாய்ப்புள்ளது. வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும். தொழில் கடன் தொகை வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.

இதுதொடர்பாக மேலும் விவரங்கள் அறிய தர்மபுரி மாவட்ட வேளாண் வணிக துணை இயக்குனரை தொடர்பு கொள்ளலாம். தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுதானியங்களை பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story