சேசுராஜபுரம், எருமுத்தனப்பள்ளி ஊராட்சிகளில் அம்மா மினி கிளினிக்குகள்; கே.பி.முனுசாமி எம்.பி. திறந்து வைத்தார்
சேசுராஜபுரம், எருமுத்தனப்பள்ளி ஊராட்சிகளில் அம்மா மினி கிளினிக்குகளை கே.பி.முனுசாமி எம்.பி. திறந்து வைத்தார்.
மினி கிளினிக்குகள் திறப்பு
தளி ஒன்றியம் சேசுராஜபுரம், எருமுத்தனப்பள்ளி ஊராட்சிகளில் அம்மா மினி கிளினிக்குகள் திறப்பு விழா நடந்தது. இதில் கே.பி.முனுசாமி எம்.பி. கலந்து கொண்டு மினி கிளினிக்குகளை திறந்து வைத்து கர்ப்பிணிகளுக்கு தாய்-சேய் ஊட்டச்சத்து நல பெட்டகங்களை வழங்கி பேசினார். பின்னர் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை அவர் பாா்வையிட்டார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 44 கிராமப்புறங்களில் 6 நடமாடும் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளது. இதில் மத்தூர், ஊத்தங்கரை, சூளகிரி, பர்கூர், தளி, கெலமங்கலம், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் 23 இடங்களில் மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது தளி ஒன்றியத்தில் 2 இடங்களில் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டு 20 கர்ப்பிணிகளுக்கு அம்மா தாய்-சேய் ஊட்டச்சத்து நல பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான வாழ்வு
இந்த மினி கிளினிக் மூலம் சேசுராஜபுரம், எருமுத்தனப்பள்ளி ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட 24 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன் பெறுவார்கள். பொதுமக்கள் அனைவரும் இந்த அம்மா மினி கிளினிக்கை பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்வு வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், வட்டார மருத்துவ அலுவலர் சச்சரித்தர், மருத்துவ அலுவலர்கள் அசோக்குமார், வெங்கடாசலம், சதீஷ் மற்றும் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜாகீர்உசேன், செவிலியர்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story