இன்று குடியரசு தினவிழா: நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


இன்று குடியரசு தினவிழா: நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 26 Jan 2021 1:56 AM GMT (Updated: 26 Jan 2021 2:08 AM GMT)

குடியரசு தினவிழாவை முன்னிட்டு நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) குடியரசு தின விழாவை முன்னிட்டு, நெல்லை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

3 அடுக்கு பாதுகாப்பு
குடியரசு தின விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இன்று காலை குடியரசு தின விழா நடைபெறுகிறது. இதில் கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்துகிறார். இதையொட்டி மைதானத்தை சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

போலீசார் உஷார்
நெல்லை மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம், கூடங்குளம் அணுமின் நிலையம், வடக்கு விஜயநாராயணம் கடற்படை தகவல் மையம் உள்ளிட்ட மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களில் ராணுவ வீரர்கள், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினருடன் உள்ளூர் போலீசாரும் இணைந்து பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 
ேமலும் மாவட்டத்தில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளிலும் போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ரெயில் நிலையத்தில் சோதனை
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம், பெருமாள்புரம் தற்காலிக பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி கண்காணித்து வருகிறார்கள். மேலும் மீனாட்சிபுரம் தாமிரபரணி ரெயில்வே பாலம் உள்ளிட்ட தண்டவாள பகுதியிலும் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய வளாகம், பிளாட்பாரங்கள், தண்டவாள பகுதிகளில் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் சோதனை நடத்தினர். ரெயில் நிலையத்துக்கும் வரும் பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பரிசோதனை செய்த பின்னரே அனுமதித்தனர்.

Next Story