மதுரவாயல் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய வழக்கில் 6 பேர் கைது தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்தவர்கள்


மதுரவாயல் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய வழக்கில் 6 பேர் கைது தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்தவர்கள்
x
தினத்தந்தி 26 Jan 2021 7:54 AM IST (Updated: 26 Jan 2021 7:54 AM IST)
t-max-icont-min-icon

மதுரவாயல் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி, 

சென்னை மதுரவாயலில், தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் மாலை கார் மற்றும் ஆட்டோவில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் அடித்து நொறுக்கினர்.

இதில் சுங்கச்சாவடியில் உள்ள கட்டணம் வசூலிக்கும் 4 பூத்களின் கண்ணாடிகள் மற்றும் அங்கிருந்த கம்ப்யூட்டர், சேர் உள்ளிட்டவைகள் முற்றிலும் சேதம் அடைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் அலறியடித்து ஓடினர்.

இது தொடர்பாக மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சங்கச்சாவடியை அடித்து நொறுக்கியவர்கள், தமிழக வாழ்வுரிமை கட்சி கொடியுடன் வந்து தாக்குதலில்ஈடுபட்டது தெரிந்தது.

இதுதொடர்பாக சுங்கச்சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த பாபு (வயது 31), அஜித் (23), கந்தன் (40), விமல்ராஜ் (24), ரமேஷ் (39), சரவணன் (40) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

அதில், தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி பாபுவுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் ஏற்கனவே கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரிந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.

Next Story