போலி இன்சூரன்ஸ் சான்றிதழ் தயாரித்து வழங்கி வாகன உரிமையாளர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி பெண் உள்பட 6 பேர் கைது


போலி இன்சூரன்ஸ் சான்றிதழ் தயாரித்து வழங்கி வாகன உரிமையாளர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி பெண் உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 26 Jan 2021 8:09 AM IST (Updated: 26 Jan 2021 8:09 AM IST)
t-max-icont-min-icon

போலி இன்சூரன்ஸ் சான்றிதழ் தயாரித்து வழங்கி ஏராளமான வாகன உரிமையாளர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, 

பிரபல இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பெயரில் போலியான வாகன இன்சூரன்ஸ் சான்றிதழ் தயாரித்து வழங்கி, ஒரு கும்பல் கோடிக்கணக்கில் மெகா பண மோசடியில் ஈடுபடுவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.

இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் சரவணகுமார், உதவி கமிஷனர் துரை ஆகியோர் மேற்பார்வையில் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீராசாமி தலைமையில் இதற்காக தனிப்படை களத்தில் இறங்கியது. தனிப்படை போலீசாரின் அதிரடி நடவடிக்கையாக மெகா மோசடி கும்பலைச் சேர்ந்த பெண் உள்பட 6 பேரை நேற்று கைது செய்யப்பட்டனர்.

6 பேர் கும்பல் பெயர் விவரம் வருமாறு:-

1. மாரியப்பன் (வயது 40). இவர் நெல்லையைச் சேர்ந்தவர். மோசடி கும்பலின் தலைவன் இவர்தான். மோசடிக்கு இவர்தான் மூளையாக செயல்பட்டவர். 2.சுமதி (29). இவரும் நெல்லையைச் சேர்ந்தவர். மாரியப்பனின் உறவினர். இவர்தான் கம்ப்யூட்டர் ஜாலம் மூலம் போலி சான்றிதழ் தயாரித்தவர். 3.ஆனந்த் (40). இவரும் நெல்லைக்காரர். இன்சூரன்ஸ் முகவர். 4.அன்சார்அலி (43). புதுக்கோட்டை கீரனூர். இன்சூரன்ஸ் முகவர். 5. ஜெயின் அலாவுதீன் (40). இவர் அன்சார் அலியின் தம்பி. இவரும் முகவர் தான். 6. செந்தில்குமார் என்ற இன்சூரன்ஸ் செந்தில் (47). இவரும் புதுக்கோட்டையை சேர்ந்தவர். இன்சூரன்ஸ் முகவர். இவர்கள் அனைவரும் பட்டதாரிகள்.

இவர்கள் அனைவரையும் கூண்டோடு கைது செய்தது குறித்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆன்லைன் மூலம் இந்த மோசடி அரங்கேற்றப்பட்டு உள்ளது. குறைந்த தொகைக்கு இன்சூரன்ஸ் சான்றிதழ் வாங்கி தருவதாக செல்போன் மூலம் வாகன உரிமையாளர்களிடம் பேசி தங்களது மோசடி வலையில் விழ வைத்துள்ளனர். மாரியப்பன் ஏற்கனவே நெல்லையில் இன்சூரன்ஸ் கம்பெனி தனியாக நடத்தி வந்துள்ளார். இதனால் இவருக்கு இந்த மோசடி வித்தை அத்துப்படியாக இருந்தது. கடந்த 6 ஆண்டுகளாக இவர் சுமார் 300 வாகன உரிமையாளர்களுக்கு போலியான இன்சூரன்ஸ் சான்றிதழ் தயாரித்து வழங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இவர் பஸ், லாரி போன்ற கனரக வாகன டிரைவர்களிடம் குறைந்த செலவில் இன்சூரன்ஸ் சான்றிதழ் பெற்றுத்தருவதாக, உண்மையான இன்சூரன்ஸ் கம்பெனி வசூலிக்கும் தொகையை விட குறைந்த பிரிமிய தொகையை பெற்றுக்கொள்வார். பின்னர் உண்மையான இன்சூரன்ஸ் கம்பெனியில் குறிப்பிட்ட வாகன உரிமையாளரின் பெயரில் மோட்டார் சைக்கிளுக்கான இன்சூரன்ஸ் பிரிமிய தொகை கட்டி உரிய சான்றிதழ் பெற்று விடுவார். உதாரணமாக லாரிக்குரிய இன்சூரன்ஸ் பிரிமிய தொகை ரூ.20 ஆயிரம் என்று வைத்துக்கொண்டால், இவர் வாகன உரிமையாளர்களிடம் ரூ.10 ஆயிரம் மட்டும் வாங்குவார். இதன் மூலம் வாகன ஓட்டிகள் தங்களுக்கு ரூ.10 ஆயிரம் லாபம் என்று கருதுவர். ஆனால் உண்மையில் லாரிக்குரிய இன்சூரன்ஸ் வாங்காமல் மோட்டார் சைக்கிளுக்குரிய இன்சூரன்ஸ்தான் மாரியப்பன் வாங்குவார். மோட்டார் சைக்கிளுக்கு இன்சூரன்ஸ் தொகை ரூ.1000 தான் உண்மையான இன்சூரன்ஸ் கம்பெனியில் கட்டுவார். அந்த வகையில் இவருக்கு ஒரு சான்றிதழ் மூலம் ரூ.9 ஆயிரம் கிடைக்கிறது.

மோட்டார் சைக்கிளுக்குரிய இன்சூரன்ஸ் சான்றிதழை உண்மையாக வாங்கி, தனது கம்ப்யூட்டர் ஜாலம் மூலம் லாரிக்குரிய இன்சூரன்ஸ் சான்றிதழாக போலியாக தயாரித்து, வாகன உரிமையாளர்களுக்கு கொடுத்து விடுவார். அந்த போலி சான்றிதழ் உண்மையான சான்றிதழ் போலத்தான் தோன்றும். ஆனால் அது மோட்டார் சைக்கிளுக்கான சான்றிதழ் என்பது அவர்களுக்கு தெரியாது. இவ்வாறுதான் போலி சான்றிதழை தயாரித்து கொடுத்து தனது மோசடி லீலைகளை மாரியப்பன் அரங்கேற்றி உள்ளார்.

போலி சான்றிதழ் தயாரிக்க மாரியப்பனுக்கு சுமதி உறுதுணையாக செயல்பட்டுள்ளார். மற்றவர்கள் முகவர்களாக செயல்பட்டுள்ளனர்.

முதலில் சுமதியின் செல்போன் எண்ணை வைத்து அவரை கைது செய்தோம். அவர் மூலம் மற்றவர்கள் கைதானார்கள். வாகன உரிமையாளர்கள் ஆன்லைன் மூலம் இன்சூரன்ஸ் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும்போது இதுபோன்ற இடைத்தரகர்கள் உதவியை நாடக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கைதான மோசடிக்கும்பலிடம் இருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. ரூ.53 லட்சம் மதிப்புள்ள நகைகள், ரூ.10 லட்சம், ஒரு சொகுசு கார் மற்றும் செல்போன்கள், மடிக்கணினி, கம்ப்யூட்டர் போன்ற பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கைதானவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story