பெரம்பலூாில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியை தடுப்பது குறித்து போலீசார் ஒத்திகை
பெரம்பலூாில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியை தடுப்பது குறித்து போலீசார் ஒத்திகை நடத்தினா்.
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்திலும், அதற்கு ஆதரவாக நாடு முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் குடியரசு தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி பெரம்பலூரில் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று எவ்வித பேரணிக்கும் அனுமதி கிடையாது என்றும், பேரணியில் ஈடுபட்டால் வழக்குப்பதிவு செய்வதோடு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஏற்கனவே எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் பெரம்பலூரில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெற்றால், அதனை எவ்வாறு தடுப்பது என்பது குறித்த போலீசாரின் ஒத்திகை நிகழ்ச்சி மேற்கு வானொலி திடலில் நேற்று நடந்தது. மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் அதிவிரைவு படை போலீசார் விவசாயிகள்போல் டிராக்டரை ஓட்டி வந்தும், அந்த பேரணியை எவ்வாறு போலீசார் தடுத்து நிறுத்தி நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்தும் தத்ரூபமாக நடித்து காட்டி ஒத்திகையில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story