கடலூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு;கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் துப்புரவு பணியாளர் மயக்கம்


கடலூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு;கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் துப்புரவு பணியாளர் மயக்கம்
x
தினத்தந்தி 26 Jan 2021 8:50 AM IST (Updated: 26 Jan 2021 8:51 AM IST)
t-max-icont-min-icon

கடலூாில் கொரோனா தடுப்பூசி போட்ட பெண் மயக்கம் அடைந்தாா்.

கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் துப்புரவு பணியாளர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா
சீனாவில் உருவான கொரோனா என்னும் கொடிய நோய் உலகத்தையே ஆட்டி படைத்து வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கடலூர் மாவட்டத்திலும் கடலூர், விருத்தாசலம், சிதம்பரம் அரசு மருத்துவமனைகள், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தடுப்பூசி

முதல் கட்டமாக 10 ஆயிரத்து 400 பேர் தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்துக் கொண்டனர். ஆனால் 7 ஆயிரத்து 800  கோவி ஹீல்டு தடுப்பூசி மருந்துகள் மட்டுமே வந்தது. நேற்று வரை 1, 200 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மற்றவர்களுக்கும் படிப்படியாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வரும் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த 32 வயது பெண் சம்பவத்தன்று இந்த கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

மயங்கி விழுந்தார்

அவர் நேற்று முன்தினம் மாலையில் மருத்துவமனையில் பணியில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை சக பணியாளர்கள் மீட்டு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபுவிடம் கேட்ட போது, தடுப்பூசி போடும் ஒரு சிலருக்கு லேசான காய்ச்சல், தலைவலி இருக்கும். அதன்பிறகு சரியாகி விடும். ஆனால் சம்பந்தப்பட்ட துப்புரவு பணியாளருக்கு தடுப்பூசி போட்டதால் எவ்வித பாதிப்பும் இல்லை. தடுப்பூசி குறித்த பயம், மன உளைச்சலால் தான் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு மனநல ஆலோசனை வழங்கி இருக்கிறோம். மாவட்டத்தில் இது வரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.

Next Story