100 நாளில் குறைகளை தீர்ப்பதாக அறிவிப்பு: எனது திட்டம் கசிந்து தான் மு.க.ஸ்டாலின் புகார் பெட்டியுடன் வந்துள்ளார்; எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு


100 நாளில் குறைகளை தீர்ப்பதாக அறிவிப்பு: எனது திட்டம் கசிந்து தான் மு.க.ஸ்டாலின் புகார் பெட்டியுடன் வந்துள்ளார்; எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 26 Jan 2021 9:01 AM IST (Updated: 26 Jan 2021 9:07 AM IST)
t-max-icont-min-icon

எனது திட்டம் பற்றி கசிந்து தான் மு.க.ஸ்டாலின் புகார் பெட்டியுடன் வந்துள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் பாக்கியராஜ் தலைமை தாங்கினார்.

அமைச்சர் சி.வி.சண்மும், எம்.எல்.ஏ.க்கள் குமரகுரு, பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, மொழிப்போர் தியாகிகளின் உருவ படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மக்களை பாதிக்கும் திட்டத்தை எதிர்ப்போம் 

தாய்மொழி தமிழுக்காக உயிர்தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் இன்று. உயிருக்கு நிகரான தமிழ் மொழியை காக்க தன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்க நாள் செலுத்தவே இந்த நாள். வாழ்க அவர்களது புகழ், வாழ்க அன்னை தமிழ்மொழி. இந்த பூமி உள்ள வரையில் அவர்களது புகழ் இருக்கும்.
 பேரறிஞர் அண்ணா, 1968-ம் ஆண்டு அனைத்து பள்ளிகளிலும் மும்மொழி திட்டத்தை அகற்றிவிட்டு, தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிக்கு இடமளித்து சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார். இதேபோல் எம்.ஜி.ஆர். 1986-ம் ஆண்டு இருமொழி கொள்கையை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றினார். ஜெயலலிதாவும், இந்தி திணிக்கப்படாது என்பதில் உறுதியாக இருந்தார். அவரது அரசும் இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளது.

சமீபத்தில் மத்திய அரசால் தேசிய கல்விகொள்கையில் கொண்டுவந்த மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தோம். மக்களை பாதிக்கும் எந்த திட்டமாக இருந்தாலும் அதை எதிர்த்து மக்கள் நலனை பாதுகாப்பதில் முன்னோடியாக விளங்கும் என்பதை உறுதிபட சொல்கிறேன்.

சி.பா. ஆதித்தனார் 

ஆண்டுதோறும் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழ் அறிஞர்களுக்கு தமிழ் பண்டிதர்களின் பெயரில் சிறப்பு செய்து வருகிறோம். அதில் குறிப்பாக மரைமலைஅடிகாளார், அயோத்திதாசன், அருட்பெருஞ்ஜோதி அடிகளார், இளங்கோ அடிகள், காரைக்கால் அம்மையார் பெயரில் விருதுகள், தற்போது தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் பெயரில் புதிதாக விருது தோற்று வித்து தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பு செய்து வருகிறோம். இவ்வாறு தமிழ் வளர, தமிழ் பெருமைபட, ஜெயலலிதாவின் அரசு எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றிய அரசு ஆகும்.

மு.க.ஸ்டாலினின் திட்டம் அவசியம் இல்லை 

இன்றைய தினம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பேட்டி அளித்துள்ளார். ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களை சந்தித்து, ஒரு புகார் பெட்டி வைத்து, அதில் மக்கள் என்ன பிரச்சினை உள்ளதோ அதை புகாராக எழுதி போட வேண்டும் என்கிற அறிவிப்பை வெளியிட்டு உள்ளதை பார்த்தேன்.
அதற்கு அவசியமே இல்லை. ஏனெனில் நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க, சட்டமன்றத்தில் நானே ஒரு திட்டத்தை அறிவித்துள்ளேன். அதுதான், முதல் அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் ஆகும். இதன் மூலம் தமிழகத்தில் 9 லட்சத்து 77 ஆயிரத்து 638 மனுக்களை பெற்றோம். இதில் 5 லட்சத்து 22 ஆயிரத்து 812 மனுக்கள் தீர்வு காணப்பட்டது. நிராகரிக்கப்பட்ட மனுக்கள், என்ன காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டது என்பதற்கான செய்தியும் அளித்தவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இப்போது தான் ஞானம் வந்ததா? 

எனவே மு.க.ஸ்டாலின் மக்களை ஏமாற்ற முடியாது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இதேபோல் மக்கள் கிராம சபை கூட்டம் என்கிற ஒரு கூட்டத்தை ஏற்படுத்தி, மக்களை அமரவைத்து அவர்களிடம் புகார் மனுக்களை பெற்றீர்கள். அந்த மனுக்கள் என்ன ஆனது? என்று மக்கள் கேட்கிறார்கள். நாங்கள் கேட்கவில்லை. இப்போது மக்கள் கிராம சபை கூட்டம் என்று சொல்லி, கூட்டத்தை கூட்டி மக்களிடம் கருத்து கேட்கிறார். ஏற்கனவே மக்கள் சொன்ன கருத்து என்ன ஆனது?, ஏற்கனவே மக்கள் கொடுத்த புகார் மனுக்கள் என்ன ஆனது? என்று மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.

ஒரு முறை மக்கள் ஏமாந்தார்கள். இனி ஏமாற அவர்கள் தயாராக இல்லை. 2019-ம் ஆண்டு மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தினீர்கள், அதில் பெறப்பட்ட மனுக்களை அரசிடம் கொண்டு வந்து சேர்த்து இருந்தால் அதை பரிசீலனை செய்து இருப்போம், ஆனால் அதுவும் செய்யவில்லை. துணை முதல்-அமைச்சர், உள்ளாட்சி அமைச்சராக இருந்த போது மு.க.ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருந்தார். இப்போது தான் ஞானம் வந்ததா?.

3 நாட்களில் குறைகளை தீர்த்தோம் 

 100 நாளில் பிரச்சினையை தீர்ப்பேன் என்கிறார். ஆனால், முதல்-அமைச்சர் சிறப்பு திட்டத்தின் மூலம் 3 நாட்களில் குறைகளை தீர்த்த அரசு எங்கள் அரசு.
ஏற்கனவே கோட்ட அளவில் உள்ள ஆர்.டி.ஓ.க்கள் மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு உள்ளனர். மாவட்டம் தோறும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க மனுக்களை பெற்று தீர்வு கண்டு வருகிறார்கள். நீங்கள் மனுக்களை வாங்கி எங்கு கொண்டு செல்ல போகிறீர்கள்? நீங்கள் என்ன ஆட்சிக்கு வரவா போகிறீர்கள். அது ஒருபோதும் நடக்காது.
மக்களை ஏமாற்றி, அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார் மு.க.ஸ்டாலின். ஆனால், தமிழக மக்கள் தெளிவாக உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு. நாடாளுமன்ற தேர்தலின் போது, தில்லுமுல்லு செய்து ஆசை வார்த்தைகூறி வெற்றி பெற்றுவிட்டீர்கள். வெற்றி பெற்ற பின்னர் நாடாளுமன்றத்தில் தமிழகத்திற்கு புதிய தொழில் வருவதற்கு குரல் கொடுத்தீர்களா? தமிழக மக்களுக்கு நன்மைகள் கிடைக்க நிதியாவது பெற்று தந்தீர்களா? ஒன்றும் இல்லை.

34 தொகுதி தான் கிடைக்கும் 

அதனால் தான் தமிழகத்தில் நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கட்சியிடம் இருந்த 2 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. 5 நாட்களுக்கு முன்பு மு.க.ஸ்டாலின் 234 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் என்றார். 200 தொகுதி என்று 2 நாட்களுக்கு முன்பு சொன்னார்.
2 நாட்களில் 34 தொகுதியை அவரே இழந்துவிட்டார். அடுத்து இன்னும் ஒரு வாரத்தில் 100, 50 என்று இழந்து விடுவார். ஆக மொத்தம் அவருக்கு கிடைப்பது 34 தொகுதி தான் என்று மக்கள் தற்போது எண்ணி உள்ளார்கள். எதிர்காலத்தில் அதுவும் இல்லாமல் போய்விடும் என்று நினைக்கிறேன்.
ஏனெனில் நாட்டு மக்களுக்காக அவர்கள் என்ன செய்தார்கள். அது ஒரு குடும்ப கட்சி. கார்ப்பரேட் கம்பெனி. மு.க.ஸ்டாலின் அதற்கு சேர்மன், உதயநிதி, கனிமொழி, தயாநிதிமாறன் ஆகியோர் டைரக்டர்கள். சேர்மன் சொல்வதை டைரக்டர்கள் செய்வார்கள். அப்படி பட்ட கட்சி தான் தி.மு.க. ஆகும். அவர்களது குடும்பத்தை தவிர்த்து யாரும் கட்சியிலும், ஆட்சியிலும் பதவிக்கு வர முடியாது. அப்படி பட்ட கட்சி நாட்டை ஆள வேண்டுமா என்று சிந்தித்து பார்க்க வேண்டும். ஆகவே தான் மக்கள் நிராகரித்தார்கள்.

ஊழல் பற்றி தி.மு.க. பேசலாமா 

அ.தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டுகளை தி.மு.க.வினர் சொல்கிறார்கள். நீங்கள் பேசலாமா. நாட்டிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு தி.மு.க. தான். ஊழலுக்கு சொந்தகார ஒரே இயக்கம் தி.மு.க.தான். இந்த சொல்லே தி.மு.க. ஆட்சியில் தான் பிறந்தது. நீங்கள் எங்களை பற்றி பேசுகிறீர்களா?. உலகமே வியக்கும் வகையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தீர்கள். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டுள்ளது.
தி.மு.க.வின் 13 முன்னாள் அமைச்சர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டுள்ளது. இது பற்றி விவரங்கள் வெளிவந்தால் வருகிற தேர்தல் பாதிக்கும் என்று கருதி, இல்லாததை மு.க.ஸ்டாலின் எங்கள் மீது தெரிவித்து வருகிறார். அ.தி.மு.க.வை பொறுத்தவரை மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

காலம் போன கடைசியில் புகார் பெட்டி வைத்து மக்களின் பிரச்சினையை தீர்ப்பதாக கூறுகிறார். கவர்ச்சிகரமாக பேசி, மக்களின் மனதை கலைத்து ஆட்சியை பிடிக்க மு.க.ஸ்டாலின் துடிக்கிறார். ஒருபோதும் நடக்காது, அவரால் கனவில் கூட ஆட்சியை பிடிக்க முடியாது. அ.தி.மு.க.வில் இளஞ்சிங்கங்கள் உள்ளன. புது ரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளது. எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து ஜெயலலிதாவின் ஆட்சி தொடரும்.

நான் அறிவித்த திட்டம் 

நான் ஏற்கனவே ஒரு திட்டத்தை கொண்டு வரலாம் என்று எண்ணி, அதை தொடக்கி நடைபெறும் வேளையில் தான், அதுபற்றி கசிந்து இந்த புகார் பெட்டிவைக்கும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் வைத்துள்ளார். அது என்னவெனில், முதல்-அமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்வு மேலாண்மை மையம் என்கிற திட்டம் ஆகும். இந்த திட்டத்தை சட்டசபையில் 110 விதியின் கீழ் என்று 15-9-2020 அன்று ஏற்கனவே அறிவித்துள்ளேன்.
அதன்படி, மனுதாரர் தாலுகா, கலெக்டர் அலுவலகங்கள், தலைமை செயலருக்கோ மனு அளிக்க நேரில் வர வேண்டாம். தங்களது வீட்டில் இருந்தபடியே செல்போன், தபால், இணையதளம், சமூக ஊடகத்தின் மூலமாகவோ மனுவாக அளிக்கலாம். இந்த திட்டத்தை 12.78 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்த 22-9-2020 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

தற்போது, 100 இருக்கைகள் கொண்ட உதவி மையம் ஏற்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்துக்கென ஒரு மென்பொருள் வடிவமைக்கப்பட்டு செயலாக்கம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கி வைக்க உள்ளேன். இந்த உதவி மையத்தின் தொடர்பு எண் 1100 ஆகும்.

90 சதவீத பணிகள் முடிந்துவிட்டது 

இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு அரசு துறை தொடர்பான புகார்களை ஒரே தளத்தில் பதிவு செய்யலாம். இந்த மையங்களில் பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் உடனுக்குடன் பரிசீலனைக்கு உட்பட்டு, உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படும். இத்திட்டத்தில் 90 சதவீத பணிகள் நடந்து முடிந்து, பயன்பாட்டுக்கு வரும் நிலையில், இந்த வி‌‌ஷயம் எப்படியோ கசிந்து போய் தான் மு.க.ஸ்டாலின் புகார் பெட்டியை வைக்க வந்துள்ளார். இவ்வாறு இருக்க, தாங்கள் தான் ஏதோ ஒரு புதிதாக திட்டத்தை அறிவித்து இருப்பது விந்தையிலும் விந்தையாகும்.

 முதல்-அமைச்சரின் உதவி மையம், ஒருங்கிணைப்பட்ட தொழில்நுட்ப மேலாண்மை திட்டம் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பாண்டியன், முருகுமாறன், சத்யா பன்னீர்செல்வம், கலைச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story