தஞ்சையில், தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் ஊர்வலம்


புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தஞ்சையில் விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் டிராக்டர்களில் தட
x
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தஞ்சையில் விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் டிராக்டர்களில் தட
தினத்தந்தி 26 Jan 2021 11:25 PM GMT (Updated: 26 Jan 2021 11:27 PM GMT)

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தஞ்சையில் போலீசாரின் தடையை மீறி டிராக்டர் ஊர்வலம் நடந்தது. அப்போது போலீசாருக்கும், போராட்டக்குழுவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.

தஞ்சாவூர்,


புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தஞ்சையில் போலீசாரின் தடையை மீறி டிராக்டர் ஊர்வலம் நடந்தது. அப்போது போலீசாருக்கும், போராட்டக்குழுவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.


வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு 


மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் தமிழகம் முழுவதும் குடியரசு தினமான நேற்று டிராக்டர் ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தஞ்சை மாவட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவினர், டிராக்டர்களில் ஊர்வலம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்ததோடு இல்லாமல், ஊர்வலத்தில் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் பங்கேற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.


போராட்டக்குழுவினர் திரண்டனர் 


இதைத்தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர், தஞ்சை மேலவஸ்தா சாவடி பகுதியில் ஒன்று கூடினர். அப்போது போலீசார் டிராக்டர் மற்றும் இரு சக்கர வாகன ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை என்றனர்.
ஆனால் திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம்  வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சுமூக உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. மேலும் டிராக்டர் ஊர்வலம் நடத்த அனுமதிக்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம். வேண்டுமானால் கைது செய்து கொள்ளுங்கள் என்று போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.


டிராக்டர் ஊர்வலம் 


இதையடுத்து போலீசார் 1 டிராக்டரிலும், அதன் பின்னர் இருசக்கர வாகனங்களிலும் செல்லுமாறு கூறினர். அதற்கு போராட்டக்குழுவினர் மறுப்பு தெரிவித்ததோடு, 4 டிராக்டர்களையாவது அனுமதிக்க வேண்டும் என்றனர். பின்னர் 4 டிராக்டர்களையும், ஒரு மாட்டு வண்டியையும் போராட்டக்காரர்கள் கொண்டு வந்து அதில் ஏறி ஊர்வலத்தை தொடங்கினர். 200-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனத்தில் போராட்டக்காரர்கள் ஊர்வலமாக வந்தனர்.
இந்த ஊர்வலத்திற்கு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமை தாங்கினார். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், ராமச்சந்திரன், நீலமேகம், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர்கள் பாரதி, முத்து.உத்திராபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


தள்ளு முள்ளு 


ஊர்வலம் தொடங்கி சில அடி தூரத்தில் மேம்பாலத்திற்கு அடியில் வந்தபோது ஊர்வலத்தில் வந்த டிராக்டர், இரு சக்கர வாகனங்களை போலீசார் மறித்தனர். ஏராளமான போலீசார் தடுப்புகள் மற்றும் கயிறுகளை கொண்டு மறித்தனர். ஆனால் போலீசாரின் தடையை மீறி போராட்டக்காரர்கள் ஊர்வலத்தை தொடர்ந்தனர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே சிறிது நேரம் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவியது. 30 நிமிடங்கள் இந்த போராட்டம் நீடித்தது. பின்னர் போராட்டக்குழுவினர் போலீசாரின் தடையை மீறி முன்னேறினர்.


மீண்டும் மறித்தனர் 


இதையடுத்து போலீசார் ஊர்வலம் செல்ல அனுமதித்தனர். 1 கிலோ மீட்டர் தூரம் வரை ஊர்வலம் வந்ததும், மீண்டும் போலீசார் தங்களுடைய நான்கு சக்கர வாகனங்களை கொண்டு வந்து சாலையின் குறுக்கே நிறுத்தி ஊர்வலத்தை மறித்தனர். அப்போது போலீசாரின் வாகனங்களை போராட்டக்காரர்கள் தள்ளிவிட முயன்றனர். இதனால் போலீசார் தங்களது வாகனங்களை உடனடியாக அங்கிருந்து எடுத்து சென்றனர். இதனைத்தொடர்ந்து ஊர்வலம் புதிய பஸ் நிலையம் வரை சென்று நிறைவடைந்தது.
இந்த போராட்டத்தில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உதயகுமார், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்காரவி, திராவிடர் கழக மாநில பொதுச்செயலாளர் ஜெயக்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் துரைமாணிக்கம், மாநில துணைத்தலைவர் முகமதுஅலி மற்றும் போராட்டக்குழு நிர்வாகிகள் மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
போராட்டத்தையொட்டி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தே‌‌ஷ்முக்சேகர சஞ்சய் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சீத்தாராமன், பாரதிராஜன், சுபா‌‌ஷ்சந்திரபோஸ் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இதேபோல் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் போலீசாரின் தடையை மீறி டிராக்டர் ஊர்வலம் நடந்தது. அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. 

Article-Inline-AD


Next Story