நெல்லையில் குடியரசு தினவிழா- கலெக்டர் விஷ்ணு தேசிய கொடியேற்றினார்
நெல்லையில் குடியரசு தினவிழாவையொட்டி, மாவட்ட கலெக்டர் விஷ்ணு தேசிய கொடியேற்றினார்.
நெல்லை,
பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. கலெக்டர் விஷ்ணு தேசியக்கொடி ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
குடியரசு தின விழா
நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் போலீசார், தீயணைப்பு படையினர், தேசிய மாணவர் படையினர், ஊர்காவல் படையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அணிவகுப்பு
மேலும், திறந்த ஜீப்பில் சென்று அணிவகுப்பை பார்வையிட்டார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உடன் சென்றார். இந்த அணிவகுப்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமை தாங்கி நடத்திச் சென்றார். சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் வாத்திய இசைக்குழுவினர் முன்நின்று அணிவகுப்பு இசை எழுப்பி சென்றனர்.
மேலும், காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 103 போலீசாருக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்கப்பட்டது.
நெல்லை மாநகரத்தில் பணியாற்றி வரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் முகமது இப்ராஹிம், சாம்சுந்தர், தட்சணாமூர்த்தி மற்றும் ஏட்டு, போலீஸ்காரர்கள் என 103 பேருக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களை கலெக்டர் விஷ்ணு அணிவித்தார்.
காவல்துறை, மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு துறை, வருவாய் துறை பொதுப்பணித்துறை, மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த அதிகாரிகள் ஊழியர்களுக்கு விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை அவர் வழங்கினார்.
மழைக்காலத்தில்...
மழை வெள்ள நேரத்தில் சிறப்பாக பணியாற்றிய நெல்லை மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரதீப், அர்ச்சனா, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ராஜாராம், மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மாடசாமி, அந்தோணிராஜ், மார்க்கரெட் தெரசா, நித்தியா, அண்டோபிரதீப், பொன்சன், சுப்பிரமணியன் அய்யப்பன் மற்றும் போலீசார் 40 பேருக்கும், மாநகர பகுதியில் சிறப்பாக பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள் வேல்கனி, ஜென்சி, மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் காசிபாண்டியன், சாமி மற்றும் போலீஸ்காரர்கள் 27 பேருக்கும் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.
தீயணைப்பு துறை
மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யாகுமார், உதவி மாவட்ட அலுவலர்கள் சுரேஷ் ஆனந்த், வெட்டும் பெருமாள், குமரேசன், முத்துப்பாண்டி,
தீயணைப்பு நிலைய அலுவலர்கள் வீரராஜ், பாபநாசம், ராதாகிருஷ்ணன், டேவிட், சுப்பிரமணியன், பாலசுப்ரமணியன் மகேஸ்வரன் மற்றும் வீரர்கள் 121 பேருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும், சிறப்பாக பணியாற்றிய மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திரச்சலம், கிராம பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் அருணாசலம், உதவி கலெக்டர்கள் சிவ கிருஷ்ணமூர்த்தி, பிரதீக் தயாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ்குமார், பயிற்சி உதவி கலெக்டர்கள் அலர்மேல்மங்கை, மகாலட்சுமி, தாசில்தார்கள் ஹபிபூர்ரகுமான், பகவதி பெருமாள், செல்வன் வெங்கட்ராமன், வெற்றிச்செல்வி, விமலாராணி மற்றும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் ஆதிமூலம், ரமேஷ்குமார், மகேஸ்வரன், மின்சார வாரிய உதவி பொறியாளர் முத்துராமலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கரகுமார், முத்துகிருஷ்ணன், பொண்ணுலட்சுமி, பாலசுப்ரமணியன், சுசிலா பீட்டர், விஜயசெல்வி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் சுலைமான் சேட், ராஜேஸ்வரன் மோகனரங்கன், சுஷ்மா, சுப்பிரமணியன், பெத்துராஜ், காதர், கந்தசாமி, மாலதி, லோபாமுத்திரை உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்று வழங்கப்பட்டது.
நலத்திட்ட உதவிகள்
வருவாய்த்துறை மூலம் 4 பேருக்கு விதவை ஓய்வூதியம் வழங்கப்பட்டது. மகளிர் திட்டம் மூலம் ஒருவருக்கு ரூ.88 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது. மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 3 பேருக்கு ரூ.5 லட்சத்து 17 ஆயிரம் கடன் உதவி வழங்கப்பட்டது. வேளாண்மைத்துறை மூலம் 4 பேருக்கும், தோட்டக்கலைத்துறை மூலம் ஒருவருக்கும், முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் ஒருவருக்கும் ஆக மொத்தம் 16 பேருக்கு மொத்தம் ரூ.94 லட்சத்து 46 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் சங்கர்நகர் திருமலை சிலம்ப பள்ளி மாணவர்களில் சிலம்பக் கலை நிகழ்ச்சி நடந்தது. விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் எம்.டாமோர், மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணன், மகேஷ்குமார், உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார், கிராம ஊராட்சிகள் உதவி இயக்குனர் அருணாசலம், மகளிர் திட்ட இயக்குனர் அந்தோணி பெர்னாண்டோ, வேளாண்மை இணை இயக்குநர் கஜேந்திரபாண்டியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முதன்மைக் கல்வி அலுவலக சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கணேசன், சங்கர் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் கணபதி சுப்பிரமணியன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். விழாவையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பாளையங்கோட்டை மகராஜநகர் உழவர் சந்தையில் நடந்த குடியரசு தின விழாவில் வேளாண்மை அலுவலர் மாரியப்பன் தேசியக் கொடியை ஏற்றினார்.
நிகழ்ச்சியில் நிர்வாக அலுவலர் தாமரைச்செல்வி, உதவி நிர்வாக அலுவலர் திருமுருகன், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story