கவர்னருக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சி: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது


கவர்னருக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சி: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது
x
தினத்தந்தி 27 Jan 2021 6:50 AM IST (Updated: 27 Jan 2021 6:50 AM IST)
t-max-icont-min-icon

கவர்னருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி, ஜன.27-
கவர்னருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்    கைது செய்யப்பட்டனர். 
கருப்புக்கொடி 
கவர்னர் கிரண்பெடியை திரும்பப்பெறக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கவர்னர் மாளிகை பாதுகாப்பு என்ற பெயரில் துணை ராணுவம் குவிக்கப்பட்டு ஒயிட் டவுண் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் தடுக்கப்பட்டது.
இதை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன் கலெக்டர் அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டனர். இந்தநிலையில் குடியரசு தினவிழாவில் கொடியேற்ற செல்லும் கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டப்போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அறிவித்திருந்தனர்.
முன்னெச்சரிக்கை 
இதன் காரணமாக கவர்னர் மாளிகையை சுற்றிலும், கவர்னர் செல்லும் வழியிலும் துணை ராணுவப்படையினரும், போலீசாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். அதிகாலையிலேயே விடுதலை சிறுத்தைகளின் துணை பொதுச்செயலாளர் பாவாணனை தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு லோகே‌‌ஷ்வரன் தலைமையிலான போலீஸ் படையினர் முன்னெச்சரிக்கை    நடவடிக்கையாக முதலியார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
இதற்கிடையே    கிரண்பெடிக்கு   கருப்புக்கொடி காட்டும் விதமாக புஸ்சி வீதி, சோனாம்பாளையம் சந்திப்பு பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மறியல்
போராட்டத்துக்கு வந்த ஒவ்வொருவரையும் ஆங்காங்கே மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்ட பாவாணன் தவளக்குப்பம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார். அவரை விடுதலை செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் தவளக்குப்பத்தில் மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை போலீசார் அங்கிருந்து கலைந்துபோக செய்தனர்.

Next Story