நிதி நிறுவனத்தில் 25 கிலோ நகைகள் கொள்ளை: கைதான 7 கொள்ளையர்கள், ஓசூர் கொண்டு வரப்பட்டனர் - இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்
நிதி நிறுவனத்தில் 25 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைதான 7 கொள்ளையர்களை போலீசார் நேற்று அதிகாலை ஓசூர் கொண்டு வந்தனர். அவர்கள் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.
ஓசூர்,
ஓசூரில் முத்தூட் பைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 22-ந் தேதி வடமாநில கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து, துப்பாக்கி முனையில் நிதி நிறுவன ஊழியர்களை மிரட்டி அங்கிருந்த ரூ.12 கோடி மதிப்புள்ள 25 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
அந்த கொள்ளையர்கள் 7 பேர், 23-ந் தேதி அதிகாலை தெலுங்கானா மாநிலம் சைபராபாத் அருகே பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 25 கிலோ தங்க நகைகள், 7 துப்பாக்கிகள், 97 தோட்டாக்கள், கார், லாரி பறிமுதல் செய்யப்பட்டது. தெலுங்கானா மாநில நீதிமன்ற நடைமுறைகளை முடித்துக் கொண்டு ஓசூர் போலீசார் நேற்று முன்தினம் அங்கிருந்து கொள்ளையர்களை அழைத்துக் கொண்டு ஓசூருக்கு புறப்பட்டனர்.
நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் கொள்ளையர்கள் 7 பேரும் ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு கைதான கொள்ளையர்களான மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூர் மாவட்டம் ரூப்சிங் பாகல், சங்கர்சிங் பாகல், பவன்குமார் விஸ்கர்மா, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டம் பூபேந்தர்மஞ்சி, விவேக்மண்டல், உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் டேக்ராம், ராஜீவ்குமார் ஆகிய 7 பேரிடமும் தீவிர விசாரணை நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) அவர்களை ஓசூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தும் போலீசார், பின்னர் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்ய உள்ளனர். 7 நாட்கள் வரையில் கொள்ளையர்கள் காவலில் எடுத்து விசாரிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story