பெரம்பலூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்; போலீசாருடன் கடும் வாக்குவாதம்- தள்ளுமுள்ளு


பெரம்பலூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்; போலீசாருடன் கடும் வாக்குவாதம்- தள்ளுமுள்ளு
x
தினத்தந்தி 27 Jan 2021 2:21 AM GMT (Updated: 27 Jan 2021 2:22 AM GMT)

பெரம்பலூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. போலீசாருடன் கடும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

பெரம்பலூர்,

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக, அகில இந்திய விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்ததன்பேரில் பெரம்பலூர் மேற்கு வானொலி திடல் முன்பு டிராக்டர் அணிவகுப்பு பேரணி போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க போராட்ட ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட செயலாளர் செல்லதுரை தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம், கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் குன்னம் ராஜேந்திரன் (தி.மு.க.), ஞானசேகரன் (கம்யூனிஸ்டு), தமிழ்மாணிக்கம் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), வீரசெங்கோலன், குதரத்துல்லா (மனிதநேய மக்கள் கட்சி), துரைராஜ் (ம.தி.மு.க),சிவாஜிமூக்கன் (காங்கிரஸ்) மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். வாகன பேரணியை மாநில செயலாளர் சாமி.நடராஜன் தொடங்கி வைத்தார். அங்கு பாதுகாப்பிற்கு நின்ற போலீசார், பேரணிக்கு அனுமதியில்லை என்று கூறி மறுத்தனர். இதனால், போலீசாருக்கும், போராட்டக்குழுவினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டக்குழுவினர் போலீசார் அமைத்த இரும்பு தடுப்பை ஒதுக்கி வைத்துவிட்டு அம்பேத்கர் சிலை வரை வந்தனர். அங்கு போலீசார் தடுத்ததால், புதிய பஸ் நிலையத்திற்கு வேறு வாகனங்களில் சென்று தேசியக்கொடி ஏற்றி உறுதிமொழி எடுத்துக்கொண்டு கலைந்து சென்றனர். மேலும் விவசாயிகள் சங்க போராட்டத்தை நினைவு கூறும் வகையில் ஆட்டோ நிலையத்தில் மரக்கன்று நடப்பட்டது.

Next Story