பெரம்பலூரில் குடியரசு தின விழா கொண்டாட்டம்; 23 போலீசாருக்கு பதக்கம், 74 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.


பெரம்பலூரில் குடியரசு தின விழா கொண்டாட்டம்; 23 போலீசாருக்கு பதக்கம், 74 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
x
தினத்தந்தி 27 Jan 2021 7:52 AM IST (Updated: 27 Jan 2021 7:54 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் குடியரசு தின விழா கொண்டாட்டப்பட்டது. இதில் 23 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கமும், கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 74 பேருக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் 23 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கமும், கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 74 பேருக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

அணிவகுப்பு மரியாதை

பெரம்பலூரில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில், குடியரசு தின விழா அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபனுடன் திறந்த ஜீப்பில் சென்று போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர், ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து 23 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கத்தை கலெக்டர் அணிவித்தார். மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு பணியில் முன் கள பணியாளர்களாக சிறப்பாக செயல்பட்ட 12 போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையை சேர்ந்த 4 பேர், விளையாட்டு துறையை சேர்ந்த 3 பேர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறையை சேர்ந்த 8 பேர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையை சேர்ந்த 15 பேர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறையை சேர்ந்த டாக்டர்கள் உள்பட மொத்தம் 74 பேருக்கு, கலெக்டர் நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், உதவி கலெக்டர் பத்மஜா மற்றும் வருவாய்த்துறை, உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை, பொது சுகாதாரத்துறை உள்பட பல்வேறு துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கு வருவாய்த்துறையினர் நேரடியாக சென்று அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்து இனிப்புகள் வழங்கினர். மேலும் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படாததாலும், சாகச நிகழ்ச்சிகள் இடம்பெறாததாலும் விழாவில் வழக்கமான உற்சாகமின்றி இருந்தது.

நீதிபதி கொடியேற்றினார்

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த குடியரசு தின விழாவிற்கு மாவட்ட முதன்மை நீதிபதி சுபாதேவி தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் நீதிமன்ற பணியாளர்கள், வழக்கறிஞர்களுக்கு இனிப்பு வழங்கி அவர் பேசுகையில், இந்திய அரசியல் சட்டம் அனைவருக்கும் சமமான உரிமையினை வழங்கி உள்ளது. அதனை ஏற்று அனைவரும் சிறப்பாக பணியாற்றிட வேண்டும், என்றார். விழாவில் பெரம்பலூர் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும், மாவட்ட நீதிபதியுமான கருணாநிதி, மகிளா நீதிமன்றத்தின் அமர்வு நீதிபதி கிரி, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தனசேகரன், தலைமை குற்றவியல் நீதிபதியும்(பொறுப்பு), மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளருமான வினோதா, சார்பு நீதிபதி ஷகிலா, குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் அசோக்பிரசாத், கருப்பசாமி மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story