2 ஆண்டுகளாக தலைமறைவு: சிறுமி பாலியல் வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது


2 ஆண்டுகளாக தலைமறைவு: சிறுமி பாலியல் வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது
x
தினத்தந்தி 27 Jan 2021 8:32 AM IST (Updated: 27 Jan 2021 8:32 AM IST)
t-max-icont-min-icon

14 வயதுடைய சிறுமியை 2 ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் பலாத்காரம் செய்து தப்பிய வழக்கில், துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு தங்கம் கடத்தி வந்த போது பிடிபட்டார்.

ஆவடி,

புதுக்கோட்டை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் (வயது 33). இவர் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்த இவருக்கு மனைவியும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர் சென்னை பட்டாபிராம் அடுத்த அண்ணாநகர் பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு 14 வயது சிறுமியை யாருக்கும் தெரியாமல் பலமுறை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது மனைவியிடம் ரூ.2 லட்சத்தை வாங்கிக்கொண்டு வேலை நிமித்தமாக செல்வதாக கூறி வினோத் வெளிநாட்டிற்கு சென்று விட்டார்.

அதன் பிறகு தனது மனைவி மற்றும் யாரிடமும் எவ்வித தொடர்பு கொள்ளாமல் அவர் இருந்து விட்டார். இந்நிலையில் 14 வயது சிறுமிக்கு உடல் சுகவீனம் ஏற்பட்டதால், வினோத்தின் மனைவி விசாரித்த போது, வினோத் தன்னை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.

இதுகுறித்து கடந்த 2019-ம் ஆண்டு ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

விமான நிலையத்தில் சிக்கினார்

ஆனால் அவர் வெளிநாட்டிற்கு தப்பி சென்று விட்டதால், அனைத்து விமான நிலையங்களிலும் ‘லுக் அவுட்’ நோட்டீசு மூலம் தகவல் கொடுத்திருந்தனர். அதன்படி 2 ஆண்டுகளுக்கு பின்னர், கடந்த 24-ந் தேதி இரவு 8 மணிக்கு துபாயில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்தில் வினோத் வந்திறங்கிய போது, மடக்கி பிடித்தனர்.

மேலும் அவரை சுங்க இலாகா அதிகாரிகள் சோதித்தபோது, காலில் ரப்பர் பேண்டு கட்டி சுமார் 700 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடித்தனர். இதையடுத்து, திருச்சி விமான நிலைய போலீசார், ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அம்பத்தூர் துணை கமிஷனர் தீபா சத்யன் உத்தரவின்பேரில், ஆவடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோனைராஜன் தலைமையிலான போலீசார் திருச்சி சென்று நேற்று வினோத்தை கைது செய்து ஆவடிக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் ஆவடி அனைத்து மகளிர் போலீசார் வினோத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story