சிங்கப்பெருமாள் கோவில்-செங்கல்பட்டு இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி மார்ச் மாதத்துக்குள் முடிவடையும்


சிங்கப்பெருமாள் கோவில்-செங்கல்பட்டு இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி மார்ச் மாதத்துக்குள் முடிவடையும்
x
தினத்தந்தி 27 Jan 2021 8:38 AM IST (Updated: 27 Jan 2021 8:38 AM IST)
t-max-icont-min-icon

சிங்கப்பெருமாள் கோவில்-செங்கல்பட்டு, தாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி மார்ச் மாதத்துக்குள் முடிவடையும் என தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில்வே மைதானத்தில் 72-வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பொது மேலாளர் ஜான் தாமஸ் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்புப்படை சார்பில் ஐ.ஜி. பிரேந்திரகுமார் தலைமையிலான பாதுகாப்புப்படை வீரர்களின் அணிவகுப்பு நடந்தது.

பின்னர் தெற்கு ரெயில்வேயில் சிறப்பாக பணிபுரிந்த ரெயில்வே ஊழியர்களுக்கும், ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர்களுக்கும், விளையாட்டு துறையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கும், கொரோனா காலத்தில் சிறந்த பங்களிப்பை அளித்தவர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்து சான்றிதழ்களை ஜான் தாமஸ் வழங்கினார். இதையடுத்து அவர் பேசியதாவது:-

சவால்கள்

கடந்த 2020-ம் ஆண்டு தெற்கு ரெயில்வே பல சவால்களை சந்தித்தது. அதில் கொரோனா பேரிடர், நிவர் மற்றும் புரவி புயல்களால் ஏற்பட்ட சவால்களை எதிர்கொண்டது முக்கியமானது. கொரோனாவுக்கு, இதுவரை பணியில் இருந்த 36 ரெயில்வே ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பேரிடர் காலத்தில் ஓய்வில்லாமல் உழைத்த, ரெயில்வே டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உள்பட அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். தெற்கு ரெயில்வேயில் கடந்த ஆண்டு மட்டும், 224 கி.மீ தூரம் தண்டவாளங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இரட்டை ரெயில் பாதை

நடப்பு நிதி ஆண்டில் கடந்த டிசம்பர் மாதம் வரை தெற்கு ரெயில்வே ரூ.2 ஆயிரத்து 173 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. அதில் ரூ.375 கோடி பணிகள் சேவை மூலமாகவும், ரூ.1,516.4 கோடி சரக்கு போக்குவரத்து மூலமாகவும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சரக்கு போக்குவரத்துக்காக தெற்கு ரெயில்வே புதிதாக மாற்றியமைக்கப்பட்ட 157 பெட்டிகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

மேலும், கடம்பூர்-வாஞ்சி மணியாச்சி-தட்டப்பாறை இடையே 30 கி.மீ, வாஞ்சி மணியாச்சி-கங்கைக்கொண்டான் இடையே 15 கி.மீ, கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள் கோவில் இடையே 11 கி.மீ உள்பட 6 வழித்தடங்களில் 99 கி.மீ தூரம் இரட்டை வழித்தடம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு முடிவடைந்துள்ளது.

மேலும் கூடுதலாக சிங்கப்பெருமாள் கோவில்-செங்கல்பட்டு, தாம்பரம்-கூடுவாஞ்சேரி, ஓமலூர்-மேட்டூர் டேம் உள்ளிட்ட வழித்தடங்களில் இரட்டை வழிப்பாதை அமைக்கும் பணி வரும் மார்ச் மாதத்துக்குள் முடிவடையும்.

மின்மயமாக்கல் பணி

அதேபோல் திருவாரூர்-காரைக்கால், திருச்சி-தஞ்சாவூர்-திருவாரூர்-காரைக்கால், மயிலாடுதுறை-தஞ்சாவூர், விழுப்புரம்-மயிலாடுதுறை-தஞ்சாவூர் பிரிவுகளில் மின்மயமாக்கும் பணி முடிவடைந்துள்ளது. தொடர்ந்து, கூடுதலாக 13 வழிதடங்கள் இந்த ஆண்டு மின்மயமாக்கப்படும்.

ரெயில்வே பாதுகாப்படை சார்பில், ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் பயணிகள் தவறவிட்ட ரூ.1.35 கோடி மதிப்பிலான பொருட்கள் மீட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் 41 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 பேரிடம் இருந்து ரூ.4.18 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை கோட்டம்

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் பொது மேலாளர் மல்யா உள்பட ரெயில்வே அதிகாரிகள் அவர்கள் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர். இதேபோல், சென்னை ரெயில்வே கோட்டத்தில் நடந்த விழாவில் சென்னை கோட்ட மேலாளர் பி.மகேஷ் தேசிய கொடி ஏற்றினார்.

மேலும், தெற்கு ரெயில்வேயில் உள்ள அனைத்து கோட்டங்களிலும், அந்தந்த கோட்ட மேலாளர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர்.

Next Story