அரியலூர், திருமானூர் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், தொழிற்சங்கத்தினர் கைது; போலீசாருடன் தள்ளு-முள்ளு


அரியலூர், திருமானூர் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், தொழிற்சங்கத்தினர் கைது; போலீசாருடன் தள்ளு-முள்ளு
x
தினத்தந்தி 27 Jan 2021 8:42 AM IST (Updated: 27 Jan 2021 8:52 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர், திருமானூர் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், தொழிற்சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர். விவசாயிகள், போலீசார் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

அரியலூர்,

அரியலூர், திருமானூர் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், தொழிற்சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர். விவசாயிகள், போலீசார் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

தடையை மீறி...

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினமான நேற்று டெல்லியில் விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி நடந்தது.
அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அரியலூர் மாவட்ட பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இதில் அரியலூரில் தொ.மு.ச., ஐ.என்.டி.யூ.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. ஆகிய தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் தண்டபாணி, சட்டநாதன், துரைசாமி, மகேந்திரன் ஆகியோர் தலைமையில் தடையை மீறி இருசக்கர வாகனங்களில் கோஷங்களை எழுப்பியவாறு வந்தனர். அவர்களை தேரடியில் அரியலூர் போலீசார் தடுத்து நிறுத்தி, 22 பேரை கைது செய்தனர்.

சாலையில் அமர்ந்து கோஷம்

இதேபோல் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருமானூர் பகுதியில் விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக அறிவித்திருந்ததால், நேற்று திருமானூரை சுற்றிலும் திருமானூருக்கு வரக்கூடிய அனைத்து சாலைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள், டிராக்டருடன் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களை ஊருக்கு வெளியிலேயே தடுத்து நிறுத்தினர். இதில் கீழக்கவட்டாங்குறிச்சி கிராமத்தில் இருந்து முடிகொண்டான் சாலை வழியாக நான்கு டிராக்டர்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை, போலீசார் வழிமறித்து திரும்பிச்செல்ல வலியுறுத்தினர். அதற்கு மறுப்பு தெரிவித்த விவசாயிகள், டிராக்டருடன் செல்ல அனுமதிக்கக்கோரி முடிகொண்டான் சாலையிலேயே அமர்ந்து போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாய சங்கத்தினர், விவசாயிகள் ஒன்றிணைந்து திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமானூர் போலீஸ் நிலையம் வரை ஊர்வலமாக நடந்து வந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்களுக்கும் அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

கைது

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதில் இந்திய விவசாய சங்க கூட்டமைப்பு மாநில செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. பாளை அமரமூர்த்தி, மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் தனபால், மக்கள் சேவை இயக்க மாநில தலைவர் தங்க சண்முகசுந்தரம், நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் அம்பேத்கர் வழியன் உள்பட விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், விவசாயிகள் என 37 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தையொட்டி பாதுகாப்பு பணிக்காக திருமானூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Next Story