குமரி- கேரள எல்லையில் குடிநீர் கிணற்றில் பெட்ரோல் ஊற்று எடுத்ததால் பரபரப்பு போலீசார் விசாரணை


குமரி- கேரள எல்லையில் குடிநீர் கிணற்றில் பெட்ரோல் ஊற்று எடுத்ததால் பரபரப்பு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 27 Jan 2021 9:27 AM IST (Updated: 27 Jan 2021 9:29 AM IST)
t-max-icont-min-icon

குமரி, கேரள எல்லையில் குடிநீர் கிணற்றில் பெட்ரோல் ஊறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

களியக்காவிளை, 

குமரி, கேரள எல்லையில் குடிநீர் கிணற்றில் பெட்ரோல் ஊறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடிநீர் கிணறு

குமரி-கேரள எல்லை பகுதியான பனச்சமூடு, புலியூர்சாலை பகுதியை சேர்ந்தவர் கோபி. இவரது வீட்டின் முன்பு குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்று தண்ணீரைதான் கோபியின் குடும்பத்தினர் தங்களது அன்றாட தேவைக்கு பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த 6 நாட்களாக கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட குடிநீரில் பெட்ரோல் வாசம் வந்து கொண்டிருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த கோபி தண்ணீரை வாளியில் எடுத்து தீ வைத்து சோதித்து பார்த்தார். அப்போது தண்ணீர் கொளுந்துவிட்டு எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால், தண்ணீரில் பெட்ரோல் கலந்திருப்பது உறுதியானது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பலரும் கோபியின் வீட்டுக்கு சென்று பெட்ரோல் கலந்த தண்ணீரை பார்வையிட்டனர். மேலும் பளுகல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். 

பெட்ரோல் பங்கில் கசிவு

கோபியின் வீட்டையொட்டி தமிழக பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இங்கு பெட்ரோல் சேமிப்பு கலன் பல அடி ஆழத்தில் நிலத்திற்குள் புதைத்து வைக்கப்பட்டுள்ளது. அந்தகலனின் சேதம் ஏற்பட்டு பெட்ரோல் கசிந்து கோபியின் வீட்டு குடிநீர் கிணற்றில் ஊறியிருக்கலாம் என தெரிகிறது. 
இதுபோல் அந்த பகுதியை சேர்ந்த மேலும் பல குடிநீர் கிணற்றிலும் பெட்ரோல் கலந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால், உடல்நல பாதிப்பு உள்பட பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. 
இதுதொடர்பாக இரு மாநில அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story