நாமக்கல்லில் குடியரசு தினவிழா 43 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கம் கலெக்டர் மெகராஜ் வழங்கினார்


நாமக்கல்லில் குடியரசு தினவிழா 43 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கம் கலெக்டர் மெகராஜ் வழங்கினார்
x
தினத்தந்தி 27 Jan 2021 9:30 AM IST (Updated: 27 Jan 2021 9:32 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் நேற்று நடந்த குடியரசு தினவிழாவில் 43 போலீசாருக்கு முதல்-அமைச்சரின் பதக்கங்களை கலெக்டர் மெகராஜ் வழங்கினார்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கி, தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனுடன் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பினை பார்வையிட்டு, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் இருவரும் குடியரசு தின விழாவை சிறப்பிக்கும் வகையில் ஆரஞ்சு, வெள்ளை, பச்சை வண்ண பலூன்களை வானில் பறக்க விட்டனர்.

தொடர்ந்து காவல்துறையில் 10 ஆண்டுகாலம் அப்பழுக்கற்ற முறையில் பணிபுரிந்தமைக்காக 43 போலீசாருக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் பதக்கங்களையும், சிறப்பாக பணிபுரிந்ததற்காக பல்வேறு துறையில் 152 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார். இதையடுத்து அணிவகுப்பினை சிறப்பாக நடத்தியதற்காக ஆயுதப்படை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கும், காவல்துறை பேண்டு வாத்தியக்குழுவினருக்கும் கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. பார்வையாளர்களும் மைதானத்தில் அனுமதிக்கப்படவில்லை. இதேபோல் கிராமசபை கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டு இருந்தன. ஆனால் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளை வருவாய்த்துறையினர் வீட்டிற்கே நேரில் சென்று பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் சாரதா, மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஊரக வளரச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், உதவி கலெக்டர்கள் கோட்டைகுமார், மணிராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சித்ரா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story