எருது விடும் விழாவில் மாடு முட்டி 13 பேர் காயம்


எருது விடும் விழாவில் மாடு முட்டி 13 பேர் காயம்
x
தினத்தந்தி 27 Jan 2021 4:12 PM GMT (Updated: 27 Jan 2021 4:12 PM GMT)

திருப்பத்தூர் அருகே எருதுவிடும் விழாவில் மாடுகள் முட்டி 13 பேர் காயமடைந்தனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே எருதுவிடும் விழாவில் மாடுகள் முட்டி 13 பேர் காயமடைந்தனர். முககவசம் அணியாத விழாக்குழுவினருக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

எருதுவிடும் விழா

திருப்பத்தூர் அருகே பெருமாப்பட்டு கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. இதில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, வெள்ளக்குட்டை, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 120 காளைகள் பங்கேற்றன. 
எருதுகள் ஓடும் வீதியின் இருபுறமும் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன.

காளைகளை, டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் 3 காளைகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. ஊர் முக்கிய பிரமுகர்கள் சின்னதுரைகவுண்டர், முருக கவுண்டர் தலைமையில் எருது விடும் விழா நடைபெற்றது. 

கிராம நிர்வாகஅலுவலர் ராஜீவ்காந்தி மற்றும் வருவாய்த் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உலகநாதன், சஞ்சீவி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

மாடு முட்டி 13 பேர் காயம்
காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டு் சீறிப் பாய்ந்து ஓடின. இருபுறமும் நின்றிருந்த பொதுமக்கள் காளைகளை உற்சாகப்படுத்த காளைகள் மீது கைகளை வைத்து தட்டினார்கள். 

அப்போது  மாடுகள் முட்டியதில் 13 பேர் காயமடைந்தனர். அவர்களில் 3 பேர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

குறைந்த நேரத்தில் வேகமாக ஓடி இலக்கை அடைந்த காளைகளில் முதல் பரிசாக ரூ.77ஆயிரம் வழங்கப்பட்டது. மொத்தம் 35 ரொக்கப் பரிசுகள், மிக்ஸி, மின்விசிறிகள், வெள்ளி விளக்குகளும் வழங்கப்பட்டன. 

முகக்கவசம் அணியாத விழாக் குழுவினருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story