தூத்துக்குடியில் வாக்காளர் திருத்த பட்டியல்: சிறப்பாக செய்லபட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பரிசு
தூத்துக்குடியில் வாக்காளர் சுருக்கமுறை திருத்த பட்டியல் பணியை சிறப்பாக செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பரிசு வழங்கி கவுரவித்தார்.
தூத்துக்குடி:
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. பேரணிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி தூத்துக்குடி எம்.ஜி.ஆர். பூங்காவில் இருந்து தொடங்கி ரோச் பூங்காவில் முடிவடைந்தது. அங்கு வாக்காளர் விழிப்புணர்வு ரங்கோலி போட்டி நடந்தது.
வாக்காளர் தினம்
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வாக்காளர் தின நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் தலைமை தாங்கி வாக்காளர் தினத்தையொட்டி நடந்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், இளம் வாக்காளர்களுக்கு அடையாள அட்டையையும் வழங்கினார். வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகளை சிறப்பாக செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஜனநாயகம்
இந்திய குடிமக்களாகிய நாம் அனைவரும் கண்டிப்பாக ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும் மதம், மொழி, சாதி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமல் எந்த ஒரு தூண்டுதல் இன்றியும் பணம் வாங்காமலும் தங்களுக்கு யாரை தேர்ந்தெடுத்தால் நல்லாட்சி கிடைக்குமோ, அந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.
சிறந்த வேட்பாளர்களை தேர்வு செய்தால் நமது நாட்டிற்கு நன்மை செய்யக்கூடிய ஒரு அரசு கிடைக்கும். வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்யாமல் விடுபட்ட 18 வயது பூர்த்தியான அனைவரும் கட்டாயம் பெயரை பதிவு செய்ய வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
கலந்துகொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத் சிங் கலோன், காமராஜ் கல்லூரி முதல்வர் நாகராஜன், தாசில்தார் ஜஸ்டின் துணை தாசில்தார் தேர்தல் செல்வ பூபதி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story