பத்மஸ்ரீ விருது மகிழ்ச்சி அளிக்கிறது- தென்காசி தொழில் அதிபர் ஸ்ரீதர் வேம்பு பேட்டி
பத்மஸ்ரீ விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என தென்காசி தொழில் அதிபர் ஸ்ரீதர் வேம்பு கூறினார்.
தென்காசி:
மத்திய அரசு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவை செய்து வருபவர்களுக்கு பத்ம விபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதுகள் வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 10 பேருக்கு பத்மபூஷண் விருதுகளும், 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கி அறிவித்துள்ளது.
இதில் தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறையில் ஐ.டி. நிறுவனம் நடத்திவரும் தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்புவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது. கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை அதிகரிக்க செய்தமைக்காக மத்திய அரசு இந்த விருது வழங்கியுள்ளது.
ஸ்ரீதர் வேம்பு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு சோஹோ என்ற ஐ.டி. நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் கிளைகள் செங்கல்பட்டு, மத்தளம்பாறை, ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா மற்றும் அமெரிக்கா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, துபாய் ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகின்றன.
இதுகுறித்து ஸ்ரீதர் வேம்பு கூறும்போது, தென்காசி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் வேலைவாய்ப்பை அதிகரிக்க நான் ஏற்பாடு செய்து வருகிறேன். பொதுவாக கிராமங்களில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் ஆகியவை அதிகரிக்க செய்ய முயற்சி செய்கிறேன். இந்த முயற்சிக்காக மத்திய அரசு எனக்கு இந்த விருதை அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி. இதற்காக மத்திய அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா்.
Related Tags :
Next Story