வேப்பந்தட்டை அருகே ஏரிக்கரை உடைந்து விளைநிலங்களில் தண்ணீர் புகுந்ததில் பயிர்கள் மூழ்கின; 20 ஆடுகள், தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது- போக்குவரத்து துண்டிப்பு
வேப்பந்தட்டை அருகே ஏரிக்கரை உடைந்து தண்ணீர் வெளியேறி விளைநிலங்களில் புகுந்ததில் பயிர்கள் மூழ்கின. மேலும் 20 ஆடுகள், தரைப்பாலம் ஆகியவை தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டன. போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
வேப்பந்தட்டை,
வேப்பந்தட்டை அருகே ஏரிக்கரை உடைந்து தண்ணீர் வெளியேறி விளைநிலங்களில் புகுந்ததில் பயிர்கள் மூழ்கின. மேலும் 20 ஆடுகள், தரைப்பாலம் ஆகியவை தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டன. போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
ஏரி நிரம்பியது
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரசலூர் கிராமத்தில் சுமார் 140 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. கடந்த சில மாதங்களாக பெய்த மழையினால், கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏரி நிரம்பியது. இந்த ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர் அன்னமங்கலம் ஏரிக்கு சென்று கொண்டிருந்தது.
இதையடுத்து ஏரியின் கிழக்குப்பகுதியில் நீர் நிரம்பி வெளியேறும் பகுதிக்கு அருகில் ஏரிக்கரையின் கீழ்ப்பகுதியில் நீர்க்கசிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. இதனை அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், மணல் மூட்டை கொண்டு நீர் வெளியேறாத வகையில் தடுப்பு ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
கரை உடைந்து தண்ணீர் வெளியேறியது
இந்நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் திடீரென கரையின் ஒரு பகுதியில் சுமார் 10 மீட்டர் அகலத்திற்கு உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏரியில் இருந்து தண்ணீர், அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் போன்று சீறிப்பாய்ந்து வெளியேறியது. தாழ்வான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. அந்த பகுதியில் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல், பருத்தி, மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. அப்பகுதி குளம் போல் காட்சியளித்தது. இதையடுத்து அரசலூர், அன்னமங்கலம் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
மேலும் ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர் விவசாய நிலங்களில் பாய்ந்து ெசன்று வேதநதி ஆற்றில் புகுந்தது. இதையடுத்து அன்னமங்கலம், வேப்பந்தட்டை, பாலையூர், தொண்டப்பாடி, நெய்க்குப்பை வழியாக சின்னாறு நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் சென்றது. குறிப்பாக ஏரிக்கரையின் அருகே குடியிருந்த விவசாயிகள் ராமலிங்கம், வீரம்மாள் உள்பட பலருக்கு சொந்தமான மொத்தம் 20 ஆடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிகிறது. மாட்டுக்கொட்டகைகள் போன்றவற்றில் தண்ணீர் புகுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.
போக்குவரத்து துண்டிப்பு
இது பற்றி தகவல் அறிந்து வந்த மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், வேப்பந்தட்டை தாசில்தார் கிருஷ்ணராஜ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பிரபாகரன் மற்றும் அதிகாரிகள், சேத பகுதிகளை பார்வையிட்டு கணக்கெடுப்பு பணியை துரிதப்படுத்தினர். ஏரி உடைந்து ஆறுகளில் தண்ணீர் சென்றது அரசலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காட்டுத்தீ போல பரவியதையடுத்து, ஆறுகளில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை ஒவ்வொரு ஊர்களிலும் ஆற்றங்கரையோரம் நின்று பொதுமக்கள் ஆர்வத்துடனும், ஆச்சரியத்துடனும் பார்த்தனர்.
மேலும் பாலையூர்-தொண்டப்பாடி இடையே வேத நதி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பாலத்தின் அருகில் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்து மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீர் வெள்ளத்தால் மாற்றுவழி தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் வேப்பந்தட்டை- வி.களத்தூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மாற்றுவழி தரைப்பாலம் சீரமைக்கப்பட்ட பின்னரே இந்த வழியாக போக்குவரத்து தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story