குளித்தலை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 5 பேர் படுகாயம்


குளித்தலை அருகே விபத்துக்குள்ளான கார்களை படத்தில் காணலாம்.
x
குளித்தலை அருகே விபத்துக்குள்ளான கார்களை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 28 Jan 2021 6:24 AM IST (Updated: 28 Jan 2021 6:29 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 5 பேர் படுகாயம்.

குளித்தலை, 

ராயனூரைச் சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 33). இவர் தனியார் செல் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவி அர்ச்சனா (26), மகள்கள் தனிஷ்கா (2), தீக் ஷிதா (3) மற்றும் இவரது மாமியார் சாரதா (50) ஆகியோருடன் கரூரில் இருந்து திருச்சிக்கு நேற்று மாலை தனது காரில் சென்றுகொண்டிருந்தார். இந்த காரை கரூர் ஈ.பி. காலனியைச் சேர்ந்த குமரவேல் (35) என்பவர் ஓட்டி சென்றார். அதேபோல காரைக்குடியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் செண்டை மேளம் வாசிக்க வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த சிலர் காரைக்குடியில் இருந்து கேரளா நோக்கி மற்றொரு காரில் (சுமோ) சென்று கொண்டிருந்தனர். கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை தண்ணீர்பள்ளி அருகே இந்த 2 கார்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ஒரு காரின் முன் சக்கரம் ஒன்று முற்றிலும் முரிந்து சேதமானது. மற்றொரு கார் (சுமோ) சாலையோரம் தலைக்குப்பிற கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற காரில் சென்ற சாரதா, காரின் டிரைவர் குமரவேல், மற்றொரு காரில் வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவ் (24), ஸ்ரீஜித் (20), ராமதாஸ் (18) ஆகிய 5 பேரும் முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல்சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த விபத்தில் இரண்டு கார்களிலும் பயணம் செய்த 2 குழந்தைகள் உட்பட 8 பேரும் அதிஷ்டவசமாக தப்பினர்‌. இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story