ஏரியில் திடீர் உடைப்பு திண்டிவனத்தில் பரபரப்பு
திண்டிவனம் ஏரியில் நேற்று மாலை திடீரென உடைப்பு ஏற்பட்டது.
திண்டிவனம்,
திண்டிவனத்தில் கிடங்கல் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி தற்போது நிரம்பி உள்ளது. இந்த நிலையில் ஏரியில் உள்ள ஒரு மதகு நேற்று மாலை 6 மணிக்கு திடீரென உடைந்தது. இதனால் தண்ணீர் அதன் வழியாக வெளியேறியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், திண்டிவனம் தாசில்தார் செல்வம், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், பொதுப்பணித்துறை கனகராஜ், திண்டிவனம் நகராட்சி பொறியாளர் பொருள், செல்வம் வருவாய் ஆய்வாளர் சித்தார்த்தன் உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
தற்காலிகமாக சீரமைப்பு
தொடர்ந்து உடைப்பு ஏற்பட்ட மதகு பகுதியில் 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் சரிசெய்யும் பணிகள் நடந்தது. மேலும் லாரிகளில் மண் கொண்டுவந்தும் அந்த பகுதியில் கொட்டப்பட்டு, அடைப்பை சீரமைக்கும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து மணல் மூட்டைகளை கொண்டு, அடைக்கும் பணியை மேற்கொள்ளுமாறு தாசில்தாருக்கு உத்தரவிட்ட கலெக்டர் அண்ணாதுரை, ஏரியையொட்டி அமைந்துள்ள கோட்டைமேடு, செந்தமிழ் நகர், பூதேரி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் படி உத்தரவிட்டார்.
பரபரப்பு
உடைப்பு ஏற்பட்ட பகுதியில் வயல்வெளி என்பதால், பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை. இருப்பினும், அங்கு பயிர்செய்யப்பட்டு இருந்த பயிர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story