வீட்டிற்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்ததால் தகராறு: மண்எண்ணெய் ஊற்றி பெண் தீக்குளித்து தற்கொலை கணவன்-மனைவி கைது


வீட்டிற்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்ததால் தகராறு: மண்எண்ணெய் ஊற்றி பெண் தீக்குளித்து தற்கொலை கணவன்-மனைவி கைது
x
தினத்தந்தி 28 Jan 2021 9:24 AM IST (Updated: 28 Jan 2021 9:24 AM IST)
t-max-icont-min-icon

ஆவடி அருகே வீட்டிற்கு செல்லும் பாதையை பக்கத்து வீட்டுக்காரர் ஆக்கிரமித்ததால் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்தார்.

ஆவடி, 

ஆவடி அடுத்த மேல்பாக்கம் கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 44). இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி (40). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை இல்லை.

இந்நிலையில் ஜெகதீஷ் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் வினோத்குமார் (36) டிரைவர். அவரது மனைவி பவானி (34).

இந்தநிலையில், ஜெகதீஷ் வீட்டிற்கு செல்லக்கூடிய பாதையில் வினோத்குமார் கார் மற்றும் ஆட்டோவை அடிக்கடி நிறுத்தி ஆக்கிரமித்து வந்ததால், இரு குடும்பத்திற்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதுகுறித்து ஜெகதீஷ் அம்பத்தூர் கோர்ட்டில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஜெகதீஷ் குடும்பத்தினருக்கு பாதை சொந்தம் என்றும் தீர்ப்பு வந்ததாக கூறப்படுகிறது.

தீக்குளித்து பலி

இருந்த போதிலும், வினோத்குமார் குடும்பத்தினர் பாதையை தொடர்ந்து ஆக்கிரமித்து வந்ததால் மீண்டும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சரஸ்வதி நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதையடுத்து வலியில் துடித்த அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரஸ்வதி நேற்று காலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து ஜெகதீஷ் கொடுத்த புகாரின் பேரில், முத்தாபுதுப்பேட்டை போலீசார் சரஸ்வதியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து வினோத்குமார் மற்றும் அவரது மனைவி பவானி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Next Story