சின்னப்பாலம்பாக்கம் கிராமத்தில் எருது விடும் விழா மாடு முட்டி 13 பேர் காயம்


சின்னப்பாலம்பாக்கம் கிராமத்தில் எருது விடும் விழா மாடு முட்டி 13 பேர் காயம்
x
தினத்தந்தி 28 Jan 2021 11:39 AM GMT (Updated: 28 Jan 2021 11:39 AM GMT)

சின்னப்பாலம்பாக்கம் கிராமத்தில் எருது விடும் விழாவில் மாடு முட்டி 13 பேர் காயம் அடைந்தனர்

அடுக்கம்பாறை

வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறை அடுத்த சின்னப்பாலம்பாக்கம் கிராமத்தில் எருது விடும் விழா நடந்தது. இதனையொட்டி மாடு ஓடும் விடுதியில் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது. சாலையின் நடுவே தேங்காய் நார் மற்றும் மணல் போடப்பட்டிருந்தது. 

முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு துறையினர், வருவாய்த்துறையினர், மருத்துவ குழுவினர் முகாமிட்டிருந்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

தனித்துணை கலெக்டர் (நிலம்) தனஞ்செழியன் தலைமை தாங்கினார். வேலூர் தாசில்தார் ரமேஷ், கணியம்பாடி வருவாய் ஆய்வாளர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி வரவேற்றார். சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 146 காளைகள் பங்கேற்றன.

 10 மணியளவில் வீதி காண்பிக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து, மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை பார்வையாளர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர். 

அப்போது மாடுகள் முட்டியதில் 13 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கு அதன் உரிமையாளர்களிடம் பரிசுகள் வழங்கப்பட்டது.


Next Story