விருத்தாசலத்தில் லாட்டரி சீட்டு வியாபாரி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது


விருத்தாசலத்தில் லாட்டரி சீட்டு வியாபாரி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 29 Jan 2021 3:45 AM IST (Updated: 28 Jan 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் லாட்டரி சீட்டு வியாபாரி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கடலூர், 

விருத்தாசலம் திரு.வி.க.நகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விருத்தாசலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையிலான போலீசார் கடந்த 31.12.2020 அன்று அப்பகுதியில் திடீரென சென்று சோதனையிட்டனர்.

அப்போது திரு.வி.க.நகர் பாரதிதெருவை சேர்ந்த ரவி (வயது 58) என்பவர் சிலரிடம் பணம் வாங்கிக்கொண்டு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் அவரை பிடிக்க முயன்ற போது, என் தொழிலையே கெடுக்கிறீங்களா என போலீசாரை பார்த்து ரவி ஆபாசமாக பேசி, அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தெரிகிறது.

இது பற்றி சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் வழக்குப்பதிவு செய்து, ரவியை கைது செய்தார். கைது செய்யப்பட்ட ரவி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். லாட்டரி வியாபாரியான ரவி மீது ஏற்கனவே 3 லாட்டரி வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் வகையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் ரவியை மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் விருத்தாசலம் போலீசார் கைது செய்தனர். அதற்கான உத்தரவு நகலை சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் போலீசார் வழங்கினர்.

Next Story