வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம்
தைப்பூசத்தை முன்னிட்டு வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வடலூர்,
வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது. ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று ஜோதி தரிசன விழா இங்கு கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி 150-வது ஆண்டு ஜோதி தரிசன விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று சன்மார்க்க கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வள்ளலார் அவதரித்த மருதூர் இல்லம், தண்ணீரால் விளக்கெரித்த கருங்குழி இல்லம், வடலூர் தருமசாலை, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களில் கொடியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து சத்திய ஞானசபையிலும் சன்மார்க்க கொடியேற்றப்பட்டது.
கொரோனா வழிகாட்டுதலின்பேரில் தைப்பூச திருவிழாவையொட்டி சன்மார்க்க சங்கங்கள் சார்பில் நடைபெறும் சொற்பொழிவு, இசை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. மேலும் கடைகள், ராட்டினம் உள்ளிட்டவைகள் அமைக்கப்படவில்லை.
ஜோதி தரிசனம்
தொடர்ந்து சத்திய ஞானசபையில் இன்று காலை ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் ஞானசபையில் நிலை கண்ணாடிக்கு முன்பு கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்மை, வெண்மை, கலப்பு என்று 7 வண்ண திரைகள் உள்ளன. அந்த திரைகள் ஒவ்வொன்றாக விலக்கி நிலை கண்ணாடிக்குள் இருக்கும் ஜோதியை காண்பதே ஜோதி தரிசனமாகும்.
அதன்படி காலை 6 மணிக்கு நடந்த முதல் ஜோதி தரிசனத்தை காண, சத்திய ஞானசபையின் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். பின்னர் நிலை கண்ணாடி முன் காணப்பட்ட 7 திரைகளும் ஒவ்வொன்றாக விலக்கப்பட்டது. அப்போது நிலை கண்ணாடிக்கு பின் வள்ளலார் கரத்தால் ஏற்றி வைத்த தீபம் பிரகாசமாக காட்சி அளித்தது.
இதை பார்த்த அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி’ என்ற மகா மந்திரத்தை உச்சரித்து ஜோதியை தரிசனம் செய்தனர்.
ஜோதி தரிசனத்தை காண போலீஸ் சூப்பிரண்டு அபிநவ், அறநிலையத்துறை இணை இயக்குனர்கள் செல்வராஜ், கஜேந்திரன் உதவி இயக்குனர் பரணிதரன், டிரம்ஸ் சிவமணி உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.
தொடர்ந்து காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணி வரை ஜோதி தரிசனம் நடைறும்
லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்
முன்னதாக ஜோதி தரிசனத்தை காண்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வடலூரில் குவிந்திருந்தனர். இவர்கள் அனைவருக்கும் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் தரும சாலையிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story