கரூர் மாவட்ட முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா கோலாகலம்


வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.
x
வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.
தினத்தந்தி 28 Jan 2021 6:30 PM GMT (Updated: 28 Jan 2021 6:30 PM GMT)

கரூர் மாவட்ட முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்தது. குளித்தலையில் 8 ஊர் சுவாமிகள் சந்திப்பு மற்றும் தீர்த்தவாரி நடந்தது.

தேரோட்டம்
கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு அலங்காரத்தில் சாமி புறப்பாடு நடந்தது. மேலும் கடந்த 26-ந்தேதி கோவிலில் சாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை 3 மணிக்கு சாமிக்கு பால், பன்னீர், இளநீர் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காலை 5 மணியளவில் பாலசுப்ரமணி சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மாலை 4.30 மணியளவில் நடந்தது. அப்போது போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். பின்னர் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது முருகனுக்கு அரோகரா... என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவிலை சுற்றி வலம் வந்து மாலை 6.30 மணியளவில் நிலைக்கு வந்தடைந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
லாலாபேட்டை-வெள்ளியணை
லாலாபேட்டை கொடிக்கால் தெருவில் அமைந்துள்ள வள்ளலார் கோவிலில் நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் லாலாபேட்டை சிவபக்தர் குழுவினர் கலந்து கொண்டு பக்திப் பாடல்களைப் பாடி, சிறப்பு வழிபாடு செய்தனர். 
வெள்ளியணையில் உள்ள முருகன் கோவிலில் பழனி பாதயாத்திரை குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து  நேற்று காலை முருகனுக்கு 108 சங்கு அபிஷேகமும், அதை தொடர்ந்து புனித நீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதேபோல் தாளியாபட்டி, செல்லாண்டி பட்டி, ஜெகதாபி, காணிகளத்தூர் மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சியில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத்தையொட்டி கொத்தப்பாளையம் அமராவதி ஆற்றின் தடுப்பணையில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு வந்தனர். பின்னர் சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.  
குளித்தலை
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றில் 8 ஊர் கோவில் சுவாமிகளின் சந்திப்பு மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி குளித்தலை முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேசுவரர், ராஜேந்திரம் தேவநாயகி உடனுறை மத்தியார்சுனேசுவரர், பெட்டவாய்த்தலை பாலாம்பிகை உடனுறை மத்தியார்சுனேசுவரர், அய்யர்மலை சுரும்பார்குழலி உடனுறை ெரத்தினகிரீசுவரர், திருஈங்கோய்மலை மரகதம்பாள் உடனுறை மரகதாசலேசுவரர், கருப்பத்தூர் சுகந்த குந்தாளம்மன் உடனுறை சிம்மபுரீசுவரர், முசிறி கற்பூரவல்லி உடனுறை சந்திரமவுலீசுவரர், வெள்ளூர் சிவகாமி உடனுறை திருக்காமேசுவரர் ஆகிய 8 கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டன. பின்னர் சுவாமிகள் பூக்கள் உள்பட பல்வேறு வகையான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ரிஷப வாகனத்தில் அந்தந்த ஊர்களில் இருந்து ஊர்வலமாக குளித்தலைக்கு கொண்டு வரப்பட்டன. 
சாமிகள் வரும் வழியெங்கும் பொதுமக்கள் பூக்கள் வழங்கி சாமிகளை வழிபட்டனர். கடம்பனேசுவரர் கோவில் அருகே நேற்று மாலை 7 ஊர் சுவாமிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து கடம்பவனேசுவரர் சாமி உள்ளிட்ட 8 ஊர் கோவில்களின் சுவாமி கடம்பவனேசுவரர் கோவில் எதிரே உள்ள கடம்பந்துறை காவிரிக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து மாலை தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் ஆற்றங்கரையில் இருந்து சுவாமிகள் அனைத்தும் அதற்கென அமைக்கப்பட்டிருந்த பந்தலுக்கு கொண்டுசெல்லப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று 8 ஊர் கோவில் சாமிகளையும் தரிசனம் செய்து சென்றனர். இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் செயல் அலுவலர்கள், அரசு அதிகாரிகள், ஊர்முக்கியஸ்தர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் வந்திருந்து சாமிதரிசனம் செய்தனர். தீர்த்தவாரி நடக்கும் இடத்தில் பக்தர்கள் கூடி இருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுவாமிகள் தீர்த்தவாரி செய்வதில் சிரமம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தோகைமலை
தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட கல்லடையில் பழனி ஆண்டவர் ேகாவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூசத்தையொட்டி ஊர் நாட்டாண்மை தலைமையில் சுவாமிக்கு பல்வேறு வகையான பூஜை பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டபட்டது. 

Next Story