புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச தேரோட்டம்


புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
x
புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
தினத்தந்தி 29 Jan 2021 12:26 AM IST (Updated: 29 Jan 2021 12:26 AM IST)
t-max-icont-min-icon

தைப்பூசத்தையொட்டி புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்த தேரோட்டத்தை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

தைப்பூச தேரோட்டம்
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே புகழிமலையில் பிரசி்த்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி நேற்று திரளான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனிதநீராடி பால்குடம், காவடிகள் எடுத்து ஊர்வலமாக புகழிமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை 3 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி வள்ளி-தெய்வானையுடன் மலையில் இருந்து கீழே பல்லாக்கி இறங்கி, தயார் நிலையில் இருந்த தேரில் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. 
இதையடுத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதையடுத்து தேர் காந்திநகர் தேர்வீதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் இந்த தேர் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை மீண்டும் இழுக்கப்பட்டு நிலையை வந்தடையும்.

பக்தர்கள் சாமி தரிசனம்
இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் புஞ்சை புகழூர் பேரூர் கழக செயலாளர் கே.சி.எஸ். விவேகானந்தன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கே.கமலக்கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. வடிவேல், குமரன் குடில் சி.எஸ்.கே. கார்த்திகேயன், புகழூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் வக்கீல் மணிவேல் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொட்டி வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரபாரதி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story