கொல்லிமலையில் மரம் முறிந்து விழுந்து கார் நொறுங்கியது; 2 பேர் காயம்


கொல்லிமலையில் மரம் முறிந்து விழுந்து கார் நொறுங்கியது; 2 பேர் காயம்
x
தினத்தந்தி 29 Jan 2021 12:29 AM IST (Updated: 29 Jan 2021 12:29 AM IST)
t-max-icont-min-icon

கொல்லிமலையில் உள்ள வளப்பூர் நாட்டில் வரலாற்று புகழ் பெற்ற அரப்பளீஸ்வரர் கோவில் உள்ளது.

கொல்லிமலைக்கு சுற்றுலா வரும் பயணிகள் அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு சென்று குளித்து மகிழ்ந்து செல்லும்போது அங்குள்ள அரப்பளீஸ்வரரையும் தரிசனம் செய்துவிட்டு திரும்புவர். இந்த நிலையில் அந்த கோவில் முன்பாக சுமார் 50 அடி உயரத்தில் இருந்த மைகொன்றை மரம் நேற்று மாலை திடீரென்று முறிந்து விழுந்தது. அப்போது கோவில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா பயணி ஒருவர் கார் மீது மரம் விழுந்ததால் அந்த கார் நொறுங்கியது. மரம் முறிந்து விழுந்தபோது அதிர்ஷ்டவசமாக அங்கு பொதுமக்கள் யாரும் இல்லை. ஆனால் சுற்றுலா வந்த முதியவர் ஒருவரும், சுமார் இருபது வயது கொண்ட இளம்பெண் ஒருவரும் கோவிலுக்குள் செல்ல முற்பட்டபோது மரக்கிளை மேல் பட்டதால் லேசான காயத்துடன் தப்பினர். அவர்கள் இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக செம்மேடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மரம் முறிந்து விழுந்த காரில் வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றுவிட்டு திரும்பி வந்தபோது கார் சேதமானது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தால் நேற்று மாலை அரப்பளீஸ்வரர் கோவில் பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. இதையறிந்த கொல்லிமலை தீயணைப்பு துறையினர் விரைந்து அங்கு வந்து காரின் மேல் கிடந்த அந்த மரத்தை அப்புறப்படுத்தினர். கொல்லிமலை வாழவந்தி நாடு போலீசாரும் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

Next Story