உத்தனப்பள்ளி அருகே, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரட்டை கொலை வழக்கில் தொழில் அதிபர் கைது
உத்தனப்பள்ளி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரட்டை கொலை வழக்கில் தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
இரட்டை கொலை
ஓசூர் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஆனந்தபாபு. இவரது மனைவி நீலிமா. தொழில் அதிபர் இவரது கார் டிரைவர் முரளி. கடந்த 11.11.2019 அன்று இரவு நீலிமா காரில் சென்றார். முரளி காரை ஓட்டி சென்றார். உத்தனப்பள்ளி அருகே சானமாவு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரில் லாரியில் வந்த கூலிப்படையினர், கார் மீது லாரியை மோத விட்டனர். தொடர்ந்து கார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள்.
இதில் கார் முழுமையாக எரிந்தது. இதில் காரில் இருந்த முரளி சம்பவ இடத்திலேயே இறந்தார். தொழில் அதிபர் நீலிமா சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அதில் தொழில் போட்டி காரணமாக நீலிமாவின் உறவினரான ஓசூரை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் ஜெ.ஆர். என்கிற ஜெ.ராமமூர்த்தி கூலிப்படை உதவியுடன் இந்த இரட்டை கொலையை செய்தது தெரிய வந்தது.
தொழில் அதிபர் கைது
இது தொடர்பாக மதுரையை சேர்ந்த வக்கீல் வெங்கட்ராமன் உள்பட 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் ஜெ.ஆர். என்கிற ஜெ.ராமமூர்த்தி மட்டும் தலைமறைவாக இருந்தார். அவர் சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்றார். அவருக்கு முன்ஜாமீன் கொடுக்கப்பட்டதை எதிர்த்து ஆனந்தபாபு தரப்பில் உத்தனப்பள்ளி போலீசார் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஜெ.ஆர். என்கிற ஜெ.ராமமூர்த்தியின் முன்ஜாமீனை ரத்து செய்து நேற்று உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து உத்தனப்பள்ளி போலீசார் ஜெ.ஆரை தேடினார்கள். ஓசூர் அருகே அத்திப்பள்ளி பகுதியில் அவர் இருப்பதாக தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்று ஜெ.ஆரை நேற்று இரவு பிடித்தனர். இந்த நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறியதையடுத்து ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story