பாளையங்கோட்டையில் பொதுமக்கள் திடீர் சாலைமறியல்
பாளையங்கோட்டையில் நேற்று பொதுமக்கள் திடீரென சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
நெல்லை:
பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகர் அம்பேத்கர் நகரில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டது. இதனால் அதிலுள்ள மூடியில் கடந்த 4️ மாதங்களாக கழிவுநீர் வெளியேறி வந்தது. இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்யவில்லை.
இதை கண்டித்தும், பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்ய வலியுறுத்தியும் நேற்று அந்த பகுதி மக்கள் ஆதித்தமிழர் கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நெல்லை- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் உடனடியாக பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்யும் வாகனத்தை அந்த பகுதிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story