செட்டிகுளத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்


செட்டிகுளத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
x
தினத்தந்தி 29 Jan 2021 1:44 AM IST (Updated: 29 Jan 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

செட்டிகுளத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவில் தைப்பூச திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

பாடாலூர்:

செட்டிகுளத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவில் தைப்பூச திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கொரோனா ஊரடங்கின் காரணமாக கோவிலில் கொடியேற்றம் நடத்தப்படாமல் தொடங்கியது. கடந்த செவ்வாய்க்கிழமை மூலவருக்கு திருக்கல்யாண உற்சவமும், நேற்று முன்தினம் வெள்ளி மயில், குதிரை வாகனத்திலும், புஷ்ப பல்லக்கிலும் சுவாமிகள் வீதி உலாவும் நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை பஞ்ச மூர்த்திகளான ஏகாம்பேரஸ்வரர் சோமாஸ்கந்தர் அலங்காரத்தில் பிரியாவிடை அம்மனுடன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய சுவாமிகள் ஒரு தேரிலும், மற்றொரு தேரில் காமாட்சி அம்மனும் எழுந்தருளினர். இதையடுத்து நேற்று மாலை தேரோட்டத்தை பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் வடம்பிடித்து தொடங்கி வைத்தார். இதையடுத்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்டத்தில் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சசிக்குமார், செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் கலா தங்கராசு மற்றும் செட்டிகுளம், பாடாலூர், இரூர், கூத்தனூர், பொம்மனப்பாடி, சத்திரமனை, குரூர், சிறுவயலூர், ஆலத்தூர் கேட், நாட்டார்மங்கலம், பெரகம்பி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டத்தையொட்டி பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் தலைமையில் பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கிய வீதிகளின் வழியாக சென்று இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு தேர்கள் நிலைக்கு வந்தடைகின்றன. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில்  அதிகாரிகள், ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Next Story