நெல்லையில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
நெல்லை அரசு மருத்துவ கல்லூரி டீன் அலுவலகம் முன்பு மருத்துவ கல்லூரி மாணவர்கள் சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில பொருளாளர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார். நிர்வாக குழு உறுப்பினர் பாரத் முன்னிலை வைத்தார். சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
கல்வி கட்டணம்
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறியதாவது:-
தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ரூ.13,600 வசூலிக்கப்படுகிறது. எம்.டி. மற்றும் எம்.எஸ். படிப்புக்கு ரூ.27,000-ம், பி.டி.எஸ். படிப்பிற்கு ரூ.11,610-ம், எம்.டி.எஸ். படிப்புக்கு ரூ.27,000 கல்வி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் லட்சக்கணக்கில் மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும். அதேபோல் ஈரோட்டில் உள்ள ஒரு அரசு கல்லூரியிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதையும் அரசு முறைப்படுத்த வேண்டும். இத்தகைய கல்வி கட்டண உயர்வால் ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
கல்வி கட்டணத்தை முறைப்படுத்த கோரி இன்று (அதாவது நேற்று) மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இதை அரசு கவனத்தில் கொண்டு தனியார் மருத்துவ கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story