வேப்பந்தட்டை அருகே உடைந்த ஏரிக்கரை சீரமைப்பு; தண்ணீர் வெளியேறுவது தடுக்கப்பட்டது
வேப்பந்தட்டை அருகே உடைந்த ஏரிக்கரை சீரமைக்கப்பட்டதையடுத்து, ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறுவது தடுக்கப்பட்டது.
ஏரிக்கரை உடைப்பு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரசலூர் கிராமத்தில் சுமார் 140 ஏக்கர் பரப்பளவிலான பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் 10 நாட்களுக்கு முன்பு ஏரி நிரம்பியது. இங்கிருந்து தண்ணீர் அன்னமங்கலம் ஏரிக்கு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் ஏரிக்கரையின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏரியில் இருந்த தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறி, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. விளை நிலங்களில் தண்ணீர் புகுந்ததில், அந்த பகுதியில் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல், பருத்தி, மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
மேலும் விவசாய நிலங்கள் வழியாக சென்ற தண்ணீர் வேதநதி ஆற்றில் கலந்து, சின்னாறு நீர்த்தேக்கம் சென்றது. ஏரிக்கரையின் அருகே குடியிருந்த விவசாயிகளில் சிலருடைய ஆடுகள், கன்றுக்குட்டி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. பாலையூர்-தொண்டப்பாடி இடையே வேத நதி ஆற்றின் குறுக்கே மாற்றுவழிக்காக அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
சீரமைப்பு
இந்நிலையில் ஏரிக்கரை உடைந்த பகுதியில் தண்ணீர் வெளியேறுவது நேற்று முன்தினம் இரவு குறைந்தது. இதையடுத்து பொதுப்பணித்துறை திருச்சி கோட்ட பொறியாளர் திருவேட்டை செல்வம், அரியலூர் செயற்பொறியாளர் ஆசைத்தம்பி, உதவி செயற்பொறியாளர்கள் வேல்முருகன், பிரபாகரன், வேப்பந்தட்டை தாசில்தார் கிருஷ்ணராஜ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு, கரை உடைந்த பகுதியை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர். இதையடுத்து ராட்சத எந்திரங்கள் மற்றும் லாரிகள் மூலம் வேறு பகுதிகளில் இருந்து மண் கொண்டு வந்து கொட்டப்பட்டு, உடைப்பு ஏற்பட்ட பகுதியை சீரமைத்தனர்.
இதனால் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறுவது முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் பாலையூர்-தொண்டப்பாடி இடையே ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட பகுதியும் சீரமைக்கப்பட்டு, அந்த வழியாக இருசக்கர வாகனங்கள் சென்று வரும் வகையில் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலை முதல் இருசக்கர வாகனங்கள் இந்த தரைப்பாலத்தின் வழியே சென்று வருகின்றன. இன்று(வெள்ளிக்கிழமை) அந்த வழியாக பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் வகையில் தரைப்பாலம் முழுமையாக சீரமைக்கப்படும் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story