ஏரியூர் அருகே 10-ம் வகுப்பு மாணவி ஆற்றில் மூழ்கி பலி


ஏரியூர் அருகே 10-ம் வகுப்பு மாணவி ஆற்றில் மூழ்கி பலி
x
தினத்தந்தி 29 Jan 2021 5:58 AM IST (Updated: 29 Jan 2021 6:00 AM IST)
t-max-icont-min-icon

ஏரியூர் அருகே ஆற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவி பலியானார். இதையடுத்து ஆற்றில் குழி வெட்டியவர்களை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏரியூர்,


தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அருகே சின்னம்பள்ளியை அடுத்த பத்தல அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன், விவசாயி. இவருடைய மனைவி காவிரியம்மாள். இவர்களுக்கு மணிகண்டன் (வயது 23) மதியழகன் (21) என 2 மகன்கள் மற்றும் முத்துலட்சுமி (15) என்ற மகள் இருந்தார். இவர்களில் மகள் முத்துலட்சுமி சின்னம்பள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காவிரியம்மாள், தனது மகள் முத்துலட்சுமி மற்றும் முத்துலட்சுமியின் தோழி சஞ்சனா (12) ஆகியோரை அழைத்துக்கொண்டு அருகே உள்ள நாகாவதி ஆற்றுக்கு சென்றார். 

ஆற்றில் மூழ்கி பலி

நாகாவதி ஆற்றில் கால்வாய் அமைப்பதற்காக ஆங்காங்கே குழி வெட்டப்பட்டுள்ளது. அந்த பள்ளங்கள் தெரியாததால் முத்துலட்சுமியும், சஞ்சனாவும் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கினர். இதனை கண்ட காவிரியம்மாள் சத்தமிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆற்றில் இறங்கி சஞ்சனாவை உயிருடன் மீட்டனர். ஆனால் எதிர்பாராதவிதமாக முத்துலட்சுமி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். 
இது குறித்து தகவல் அறிந்ததும், பெரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

சாலைமறியல்

இதனிடையே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களுக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் பென்னாகரம்-மேச்சேரி சாலைக்கு திரண்டு வந்தனர். 
அப்போது, கால்வாய் அமைக்க ஆற்றில் ஆங்காங்கே குழி வெட்டி வைத்திருப்பதால் தான் இது போன்ற சம்பவங்கள் ஏற்படுகிறது, எனவே கால்வாய் பணிக்காக ஆற்றில் குழி வெட்டிய ஒப்பந்ததாரரை கைது செய்ய வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் ஆற்றில் மூழ்கி பலியான பள்ளி மாணவிக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும், பென்னாகரம் தாசில்தார் சேதுலிங்கம் மற்றும் பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்தர்ராஜன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆற்றில் குழி வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த மறியல் காரணமாக பென்னாகரம்-மேச்சேரி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story