நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக்கோரி மனிதநேய மக்கள் கட்சியினர் மறியல் போக்குவரத்து பாதிப்பு
நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக்கோரி மனிதநேய மக்கள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற மாதா பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலவர் கோவில் ஆகியவை உள்ளன. இதனால் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பல்வேறு பகுதியில் இருந்து நாகை மாவட்டத்திற்கு வந்து செல்கின்றனர்.
நாகையில் இருந்து தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை கோட்டை வாசல்படி அருகே குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக இந்த சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலை ஆங்காங்கே பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
மறியல் போராட்டம்
இந்த நிலையில் நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சியினர் நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜபருல்லா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கல்லார் ரபீக், மாநில விவசாய அணி பொருளாளர் ஓ.எஸ்.இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போக்குவரத்துக்கு லாயக்கற்று குண்டும், குழியுமாக காணப்படும் நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை உடனே சீரமைக்க வலியுறுத்தியும், தொடர்ந்து அலட்சியம் காட்டும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்தும் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் ரமாதேவி, போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதற்கு போராட்டக்காரர்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தெரிவித்தனர்.
தொடர்ந்து, தாசில்தார் ரமாதேவி கூறுகையில், பருவம் தவறி பெய்த மழை காரணமாக நிதி ஒதுக்கியும் சாலை சீரமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதுபோல் அலட்சியம் காட்டி வந்தால், நாகையில் பல்வேறு இடங்களில் பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்து விட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக இந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story