நெற்பயிர் பாதிக்கப்பட்ட பகுதிகளை 3 கி.மீ. தூரம் மோட்டார்சைக்கிளில் சென்று கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு
நெற்பயிர் பாதிக்கப்பட்ட பகுதிகளை 3 கி.மீ. தூரம் மோட்டார்சைக்கிளில் சென்று கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு மேற்கொண்டார்.
ஒரத்தநாடு,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறையின் சார்பில் பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு நடைபெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனை தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில், எந்த ஒரு பதிவும் விடுபடாமல் பதிவு செய்யப்படுகிறதா? எனவும், ஏற்கனவே பதிவு செய்த விண்ணப்பங்களில் இடம்பெற்றுள்ள விவசாய நிலத்தை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் வேளாண், வருவாய்த்துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
மோட்டார்சைக்கிளில் பயணம்
அதன் அடிப்படையில் ஒரத்தநாடு தாலுகா சோழபுரம் மேற்கு கிராமத்தில் விவசாயி சத்தியமூர்த்தியின் நிலத்தை பார்வையிடுவதற்காக மோட்டார்சைக்கிளில் 3 கி.மீ. தூரம் வாய்க்கால் பாதையில் பயணம் செய்து ஆய்வு செய்தார். விண்ணப்பத்தில் அளித்துள்ள வங்கி கணக்கு மற்றும் சிட்டா ஆகியவற்றையும் கலெக்டர் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து சோழபுரம் ஊராட்சியில் செல்லமுத்து என்பவரின் நிலத்திற்கும் சென்று ஆய்வு செய்தார். பின்னர் விவசாயிகளிடம், அரசுக்கு அறிக்கை அனுப்பிவைத்து உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆய்வின் போது வேளாண்மைத்துறை துணை இயக்குனர் கோமதி, தாசில்தார் கணேஷ்வரன், வேளாண் அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், விவசாயிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story