ஈரோட்டில் பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு செவிலியர்கள் போராட்டம்; கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்


ஈரோட்டில் பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு செவிலியர்கள் போராட்டம்; கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 29 Jan 2021 8:43 PM IST (Updated: 29 Jan 2021 8:43 PM IST)
t-max-icont-min-icon

பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு செவிலியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரி செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

ஈரோடு

தமிழ்நாட்டில் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் செவிலியர் பணியிடங்கள் பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்பட்டு வந்தன.

 அவர்களுக்கு உடனடியாக அரசு செவிலியர்களுக்கான ஊதியம் மற்றும் அனைத்து சலுகைகளும் கிடைத்து வந்தன. கடந்த 2015-ம் ஆண்டு முதல் மருத்துவத்துறை அரசு தேர்வு வாரியம் மூலம் செவிலியர்கள் நியமனம் நடந்து வருகிறது.

2015-ம் ஆண்டு தேர்வில் வெற்றி பெற்று பணிநியமனம் பெற்ற செவிலியர்களுக்கு தொடக்க ஊதியமாக ரூ.14 ஆயிரம் வழங்கப்பட்டது. பின்னர் 2 ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்படுவதாக கூறி பணியில் அமர்த்தப்பட்டனர். ஆனால், 6 ஆண்டுகள் ஆகியும் யாரும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

எனவே அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழக அரசு செவிலியர்களுக்கு மத்திய அரசு செவிலியர்களுக்கு வழங்கப்படும் விகிதத்தில் ஊதியம் வழங்க வேண்டும். செவிலியர்களுக்கு 5 கட்ட பதவி உயர்வுகள் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

பணி நிரந்தரம் செய்யப்படாத அரசு செவிலியர்கள் இன்று வேலை நிறுத்தம் மற்றும் சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக ஈரோடு மாவட்டத்தில் இருந்து சுமார் 250 செவிலியர்கள் சென்றனர். இந்த செவிலியர்களுக்கு ஆதரவாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் ஷகிலா, மாவட்ட செயலாளர் சிந்து ஆகியோர் கூறியதாவது:-

தேர்வின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களை 6 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யவில்லை. ஆண்டுக்கு வெறும் ரூ.500 மட்டுமே ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் உச்சக்கட்டத்தில் இருந்தபோது உயிரைக்கொடுத்து பணியாற்றிய அரசு செவிலியர்களை அரசு கண்டுகொள்ளவில்லை. 

எனவே உடனடியாக அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மற்றும் பதவி உயர்வுகள் வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கிறோம். பொதுமக்கள் எங்கள் போராட்டத்தால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக எங்கள் எதிர்ப்பினை கருப்பு பட்டை அணிந்து வெளிப்படுத்துவதுடன், பணியையும் தொடர்ந்து செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story