ரேஷன் கடைகளில் சர்வர் பிரச்சினையால் விரல்ரேகை பதிவு ரத்து


ரேஷன் கடைகளில் சர்வர் பிரச்சினையால் விரல்ரேகை பதிவு ரத்து
x
தினத்தந்தி 29 Jan 2021 9:30 PM IST (Updated: 29 Jan 2021 9:30 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் சர்வர் பிரச்சினையால் விரல்ரேகை பதிவு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம், 

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விற்பனை முனைய எந்திரம் வழியாக அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அனைத்து ரேஷன் கடைகளிலும் உள்ள பயோமெட்ரிக் எந்திரத்தில் குடும்ப அட்டையில் உறுப்பினராக உள்ள யாரேனும் ஒருவர், விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும், அவர் பதிவு செய்யும்போது ஆதார் எண், சர்வரில் இணைப்பு கிடைத்தால் மட்டுமே விற்பனை செய்ய முடியும். ஆனால் சர்வர் இணைப்பு கிடைக்காததால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படுவது பாதிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க பல மணி நேரம் காத்துக்கிடந்தும், பொருட்கள் கிடைக்காமல் வீட்டுக்குச்சென்று திரும்பி மறுநாள் வருவது என்பது தொடர் பிரச்சினையாக இருந்து வந்ததால் அவ்வப்போது விரல்ரேகை பதிவு செய்வது நிறுத்தப்பட்டு குடும்ப அட்டைகள் ஸ்கேன் மட்டுமே செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது, பொங்கல் பண்டிகைக்கு முன்பாக மீண்டும் விரல்ரேகை பதிவு தொடங்கப்பட்டது. ஆனால் சர்வர் பிரச்சினை காரணமாக மீண்டும் பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து பொங்கல் பண்டிகைக்காக பரிசு தொகுப்பை விரைந்து வழங்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த 4-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை இந்த விரல்ரேகை பதிவு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

விரல்ரேகை பதிவு ரத்து

இதனிடையே மீண்டும் வழக்கம்போல் அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கு விரல்ரேகை வைப்பது கட்டாயம் என உணவுத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1, 254 ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் எந்திரத்தில் விரல்ரேகை பதிவானவர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் சர்வர் பிரச்சினை காரணமாக பல ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையருக்கு பல்வேறு புகார்கள் சென்றதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதற்கு விரல்ரேகை பதிவு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், சர்வர் பிரச்சினையால் விரல்ரேகை பதிவு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பழைய நடைமுறைப்படி பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். விரல்ரேகை பதிவு கட்டாயம் இல்லை, மறு உத்தரவு வரும் வரை இது நடைமுறையில் இருக்கும் என்றார்.

Next Story