தெருவில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்


தெருவில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 29 Jan 2021 9:31 PM IST (Updated: 29 Jan 2021 9:31 PM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூரில் தெருவில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்,
திருவெண்ணெய்ல்லூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் இயங்கி வருகின்றது. தற்போது சம்பா நெல் அறுவடை தொடங்கி உள்ளதால் திருவெண்ணெய்நல்லூர், ஏமப்பூர், ஏனாதிமங்கலம் மழையம்பட்டு, தடுத்தாட்கொண்டூர், பெரியசெவலை, டி.எடையார், சித்தலிங்கமடம், மேட்டுக்குப்பம், அரசூர், அரும்பட்டு, மாதம்பட்டு, கோவுலாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்தனர். நெல்மூட்டைகளை வைக்க இடமில்லாததால் அவைகள் அனைத்தையும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தி்ன் அருகில் உள்ள தெருவில் அடுக்கி வைத்தனர். ஆனால் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படவில்லை. 

நெல்லை கொட்டி போராட்டம் 

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு உள்ள தெருவில் நெல்லை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் போதிய இடவசதி இல்லாதால் தெருவில் மூட்டைகளை அடுக்கி வைக்க வேண்டிய நிலை உள்ளது. அதுமட்டுமின்றி நெல் கொள்முதல் செய்ய வெளியூர் வியாபாரிகளை இடைத்தரகர்களை அனுமதிக்கவில்லை. இதனால் நெல் விலையை குறைத்து கொள்முதல் செய்வதால் பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. இது பற்றி அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பதற்காக போராட்டம் நடத்துகிறோம் என்றனர். 
இதற்கிடையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட சூப்பிரண்டு விஜி, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Next Story