ஏரிச்சாலையில் உலா வந்த காட்டெருமைகளால் போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானல் ஏரிச்சாலையில் உலா வந்த காட்டெருமைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானல்:
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானல் மலைப்பகுதியிலும், நகரை ஒட்டியுள்ள வனப்பகுதியிலும் ஏராளமான காட்டெருமைகள் உள்ளன.
இந்தநிலையில் நேற்று காலை 11 மணி அளவில் சுமார் 10 காட்டெருமைகள், குட்டிகளுடன் ஏரிச்சாலையில் உலா வந்தன. இதனை கண்ட சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தப்பித்தோம், பிழைத்தோம் என அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
மேலும் சிலர் காட்டெருமைகளின் பின்புறம் மோட்டார் சைக்கிள்களில் விரட்டி வந்தனர். இதனால் அவை ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தன.
சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு அந்த காட்டெருமைகள் அனைத்தும் அருகில் இருந்த தனியார் தோட்டத்திற்குள் சென்றன.
காட்டெருமைகள் உலா வந்ததால் ஏரிச்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் காட்டெருைமகளை கண்டதும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடிய சம்பவத்தால் ஏரிச்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கொடைக்கானல் நகர் பகுதிகளில் காட்டெருமைகள் அடிக்கடி நுழைந்து பல்வேறு தரப்பினரையும் அச்சுறுத்தி வருகின்றன. எனவே காட்டெருமைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story