முல்லைப்பெரியாறு அணைக்கு மீண்டும் மின் இணைப்பு 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி


முல்லைப்பெரியாறு அணைக்கு மீண்டும் மின் இணைப்பு 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 29 Jan 2021 10:32 PM IST (Updated: 29 Jan 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணைக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இதனால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தேனி:

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. 

இந்த அணையின் நீர்மட்ட உயரம் 152 அடி. இதில் 142 அடி வரை தண்ணீரை தேக்கிக் கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

இந்த அணைக்கு கடந்த 1980-ம் ஆண்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது. வல்லக்கடவில் இருந்து வனப்பகுதி வழியாக மின்கம்பங்கள் அமைத்து மின் கம்பிகள் கொண்டு செல்லப்பட்டன. 

கடந்த 2000-ம் ஆண்டு வல்லக்கடவு வனப்பகுதியில் மின்சார கம்பி உரசியதில் காட்டுயானை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.

மின் இணைப்பு துண்டிப்பு

இந்த சம்பவத்தை தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

இதை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் தமிழக பொதுப்பணித்துறை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கில் மின் கம்பங்கள் வழியாக மின்சாரம் கொண்டு செல்லாமல், தரையில் குழாய்கள் பதித்து மின் கம்பிகள் வழியாக மின்சாரம் கொண்டு செல்ல ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கேரள ஐகோர்ட்டு உத்தரவுப்படி முதற்கட்டமாக ரூ.95 லட்சம் வைப்புத்தொகை கேரள மின்வாரியத்துக்கு தமிழக பொதுப்பணித்துறை சார்பில் செலுத்தப்பட்டது.  

ஆனால் மின் இணைப்பு கொண்டு செல்வதற்கு கேரள வனத்துறை அனுமதி அளிக்காமல் இழுத்தடித்தது. 

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அமைக்கப்பட்ட மூவர் கண்காணிப்பு குழுவின் ஆய்வு கூட்டங்களிலும் இதுகுறித்து விவாதித்து மின்இணைப்பு வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.

இதையடுத்து வல்லக்கடவில் இருந்து சுமார் 5.65 கிலோமீட்டர் தூரத்துக்கு பூமிக்கு அடியில் குழாய்கள் பதித்து மின்இணைப்பு கம்பிகள் கொண்டு செல்லும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

வல்லக்கடவில் இருந்து அணைக்கு மின் இணைப்பு வழங்கும் பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன. 

இதையடுத்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் அணைக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது. 

5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் கடந்த 20 ஆண்டுகளாக ஜெனரேட்டர் மூலம் மின் உற்பத்தி செய்து அணைக்கு பயன்படுத்தப்பட்டது. 

அணையில் உள்ள 13 மதகுகளை இயக்குவதற்கும் ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டது. 

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட உள்ள தகவல் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Next Story