மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி நர்சுகள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்


மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி நர்சுகள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
x
தினத்தந்தி 29 Jan 2021 10:39 PM IST (Updated: 29 Jan 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி 350 நர்சுகள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர், 

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி  350 நர்சுகள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

5 அம்ச கோரிக்கைகள் 

நர்சுகளுக்கு மத்திய அரசு  ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய நர்சுகளுக்கு ஒரு மாத ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.  
 கொரோனாவால் பாதித்த நர்சுகளுக்கு நிவாரணம் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கருப்பு பேட்ஜ் 

அதன்படி இன்று  திருப்பூர் மாவட்டத்தில்  கோரிக்கைகளை வலியுறுத்தி நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பணி பாதிக்காத வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்து அவர்கள் பணியில் ஈடுபட்டனர்.
 தங்களது கோரிக்கைகள் குறித்து கவனம் ஈர்க்கும் விதமாக போராட்டம் நடைபெற்றது. திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் உடுமலை அரசு மருத்துவமனை, தாராபுரம் அரசு மருத்துவமனை என மாவட்டம் முழுவதும் நர்சுகள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

350 நர்சுகள் 

இது குறித்து தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க மாநில பொருளாளர் (புறநகர்) கீதா கூறியதாவது:- 

அரசு மருத்துவமனை நர்சுகள் நீண்ட நாட்களாக 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனால் கோரிக்கைளை வலியுறுத்தியும், கவன ஈர்ப்பு நடவடிக்கையாகவும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் பாதிப்பு ஏற்படாமல் மாவட்டம் முழுவதும் 350 நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். 

இதன் பின்னரும் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றாலும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டாலும் தொடர் போராட்டங்கள் நடைபெறும். இதன் ஒரு பகுதியாக அரசு மருத்துவமனைகள் முன்பு நாளை (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டமும் நடைபெற இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story