காதல் மனைவியை ஏமாற்றிய கணவருக்கு ஆயுள் தண்டனை
காதல் மனைவியை ஏமாற்றியதோடு அவரை சாதி பெயரை சொல்லி திட்டிய கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
விழுப்புரம்,
திண்டிவனம் தாலுகா வண்டராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது 25). இவரும் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கொட்டாமேட்டை சேர்ந்த ராஜேஷ்குமார் (32) என்பவரும் காதலித்து கடந்த 10.9.2010 அன்று திருமணம் செய்து கொண்டனர்.
அதன் பின்னர் மஞ்சுளாவை அவரது பெற்றோர் வீட்டிலேயே விட்டுவிட்டு ராஜேஷ்குமார், சென்னைக்கு சென்று அங்கு எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டும் திண்டிவனத்திற்கு வந்து மனைவி மஞ்சுளாவை பார்த்து விட்டு சென்றுள்ளார். மேலும் மஞ்சுளா கர்ப்பமாக இருந்தபோது கருக்கலைப்பு மாத்திரை வாங்கி கொடுத்து கருவை கலைத்துள்ளார்.
மனைவியை ஏமாற்றி 2-வது திருமணம்
அதன் பிறகு கடந்த 2014-ல் மஞ்சுளாவை ராஜேஷ்குமார் சென்னைக்கு அழைத்துச்சென்று திருவேற்காட்டில் வாடகை வீட்டில் தங்க வைத்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த சூழலில் மஞ்சுளா, சொந்த ஊருக்கு வந்த சமயத்தில் அவருக்கு தெரியாமல் கடந்த 10.11.2014 அன்று கோமதி என்ற பெண்ணை 2-வதாக ராஜேஷ்குமார் திருமணம் செய்து கொண்டார். இதை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த மஞ்சுளா, தனது கணவர் ராஜேஷ்குமாரிடம் நியாயம் கேட்டார்.
இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ்குமார், மஞ்சுளாவை சாதி பெயரை சொல்லி தகாத வார்த்தையால் திட்டி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மஞ்சுளா, திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்குமாரை கைது செய்து விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
கணவருக்கு ஆயுள் தண்டனை
இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எழில், குற்றம் சாட்டப்பட்ட ராஜேஷ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், பாதிக்கப்பட்ட மஞ்சுளாவிற்கு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராஜேஷ்குமார், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story