பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பா.ம.க.வினர் மனு அளிக்கும் போராட்டம்


பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பா.ம.க.வினர் மனு அளிக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2021 12:02 AM IST (Updated: 30 Jan 2021 12:06 AM IST)
t-max-icont-min-icon

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி பா.ம.க.வினர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்:

தமிழகத்தில் வன்னியர் சமூகத்தினருக்கு கல்வி -வேலை வாய்ப்பில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பா.ம.க.வினர் நேற்று கலெக்டர் அலுவலகங்களுக்கு திரண்டு வந்து மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் ரோவர் ஆர்ச், வெங்கடேசபுரம், பாலக்கரை ஆகிய பகுதிகளை சுற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவின்பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வன்னியர் சங்கத்தின் மாநில செயலாளர் வைத்தி, பெரம்பலூர் மாவட்ட பா.ம.க. செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில், வன்னியர் சமூகத்தினர், பா.ம.க.வினர் என ஏராளமானவர்கள் பெரம்பலூர் ரோவர் ஆர்ச் அருகே திரண்டனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு வெங்கடேசபுரம், பாலக்கரை ரவுண்டானா வழியாக கலெக்டர் அலுவலகத்துக்கு செல்ல முயன்றனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். 

அப்போது அவர்கள், கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் வன்னியர் சங்க மாநில செயலாளர், பா.ம.க. மாவட்ட செயலாளர் ஆகியோருடன் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று, கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் மனு அளித்து, அதனை முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

Next Story